யாழ் குடாநாட்டில் படைகளைக் குறைக்க மகிந்தவிடம் வலியுறுத்தினார் மன்மோகன்சிங்

5.3.14

யாழ்.குடநாட்டில் இருந்து சிறிலங்காப் படையினரைக் குறைக்கும்படி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று மியான்மர் தலைநகர் நேபிடோவில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சுமார் 25 நிமிட சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே, யாழ்.குடாநாட்டில் படைக்குறைப்பை மேற்கொள்ளுமாறு மன்மோகன்சிங் வலியுறுத்தியதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
நேபிடோவில் இருந்து நேற்று மாலை இந்தியப் பிரதமருடன் புதுடெல்லி திரும்பும் வழியில், விமானத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித்,
“யாழ்.குடாநாட்டில் படைக்குறைப்பை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இந்தச் சந்திப்பை பயன்படுத்தியிருந்தார்.

அதற்கு சிறிலங்கா அதிபர், போர் உச்சநிலையில் இருந்த போது, 175,000 ஆக இருந்த படையினரின் எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், கண்ணிவெடிகளை அகற்றும் பணி மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகள் முடிவடைந்ததும், மேலும் படைக்குறைப்பு மேற்கொள்ளப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
அத்துடன், வடக்கு,கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாக பேசுவதற்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரும்படி, தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இந்தியா அறிவுறுத்த வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக, சிறிலங்காவில் அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்தை உருவாக்க, தமிழ் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் எமது நண்பர்களும் சரி, எம்மை விமர்சிப்போரும் சரி, வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் நலனையே மனதில் கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.
நான் வடக்கு மாகாணத்துக்குச் சென்ற போது, சிறிலங்கா அரசுடன் பேச வேண்டாம் என்று எந்தவொரு குரலும் கேட்கவில்லை.

அரசியலில் உள்ள ஒவ்வொருவருக்கும் தமது நலன்களை ஊக்குவிக்கும் உரிமை உள்ளது.
எனினும் அவர்கள் தேசிய நலனை மனதில் கொள்ள வேண்டும்.
சிறிலங்காவுடன் இன்று நடத்தப்பட்ட பேச்சு, வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான, இந்தியாவின் தேசிய நலனை அடிப்படையாக கொண்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :