இராணுவத்திற்கு ஆண்களை அழைக்காத காரணமென்ன?- விக்னேஸ்வரன் கேள்வி

8.3.14

இராணுவத்தில் இணையமாறு தமிழ்ப் பெண் யுவதிகளை அழைத்தவர்கள், ஏன் ஆண்களை அழைக்கவில்லையென வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் இன்று நல்லூர் துர்க்காதேவி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எமது வடமாகாணமானது கிழக்கு மாகாணத்துடன் சேர்ந்து போரில் இருந்து அண்மையில் விடுபட்டு வந்துள்ளது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே.

  போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டை வலியுறுத்தும் திட்டங்கள் குறைவாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்நிலையைக் கருத்தில் எடுத்து எமது தமிழ்ப் பேசும் பெண்களின் வருங்காலம் பற்றி ஆராய வேண்டியது எமது கடப்பாடாக இன்று மாறியுள்ளது. இன்று நவீன சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்களாலும், மரபு சார்ந்த கூட்டுறவுக் குடும்ப வாழ்வு அருகி வருகின்றமையினாலும் போரானது எமது வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள பலவித அனர்த்தங்கள், அவலங்கள், அல்லல்கள் காரணமாகவும் பெண்களின் சுமை பல்மடங்கு மேலோங்கியுள்ளது.

தலைமைத்துவத்தினுள் பெண்களுக்கு சமவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதால் சமுதாயத்தில் நன்மாற்றங்களை ஏற்படுத்தலாம். எனினும் யதார்த்தம் எதுவெனப் பார்த்தோமானால் வடமாகாணம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமாகியுள்ளது. இராணுவத்தை வெளியகற்ற வேண்டும் என்ற எமது கோரிக்கை ஒரு சில நன்மாற்றங்களைத் தற்பொழுது ஏற்படுத்தி வருவதாக நாம் காணக்கூடியதாக இருந்தாலும் எமது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அளவுக்கு இம்மாற்றங்கள் முன்னேறியுள்ளதாக நாம் கருத முடியாது இருக்கின்றது.

முக்கியமாக வன்னிப் பெருநிலத்தில் நிலைமை மாற்றமடையவில்லை என்றே கூறலாம். பெண்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லாமையினால் அவர்களின் இயற்கையான சுதந்திர நடமாட்டம் தடைப்படுத்தப்பட்டுள்ளது. பல பெண் குழந்தைகள் கல்வி, தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள இப்பாதுகாப்பின்மை தடையாக இருந்து வருகின்றது. மருத்துவ வசதிகளை நாடிச் செல்வது கூடத் தடைப்பட்டுள்ளது. இராணுவத்தினர் சம்பந்தப்பட்ட பாலியல் வன்முறைகள், பாலியல் தொந்தரவுகள் காவற்துறையினரால் அசட்டையுடனேயே கையாளப்படுகின்றன. அண்மையில் இராணுவத்திற்குத் தமிழ்ப் பெண் யுவதிகளைச் சேர அழைத்துள்ளார்கள்.

  ஏன் ஆண்களை அழைக்கவில்லை என்ற கேள்வி உடனேயே எழுகின்றது. அது மட்டுமல்ல. இளம்பெண்களை வீடுவீடாகச் சென்று வலிந்து இராணுவத்தினர் அழைப்பதாக எமக்குச் செய்திகள் வந்துள்ளன. பயம், வறுமை, பாதுகாப்பற்ற தன்மை போன்ற பல காரணங்கள் எம் பெண்களை இராணுவத்தினுள் உள்ளீர்க்கப்படக் கூடும். ஆனால் மேலிடத்து ஆணைகளை நிறைவேற்றுவதே இராணுவக் கீழ்மட்டச் சிப்பாய்களின் கடமை என்பதை இந்த யுவதிகள் தெரிந்திருக்கின்றார்களா என்பது எமக்குத் தெரியாதிருக்கின்றது. அடுத்து வீட்டத்திட்டங்கள் போரினால் பாதிக்கப்பட்ட வசிப்பிடங்கள் தேவையுள்ள பெண்களின் நலனை முன்வைத்து இயங்குவதாகத் தெரியவில்லை.

 பல சந்தர்ப்பங்களில் இவ் வீட்டுத் திட்டங்களில் வீடுகளைப் பெறுபவர்கள் அரசியல் அடிவருடிகளேயன்றி அடிப்படைத் தேவையுள்ளவர்கள் அல்ல என்பது அறியப்பட்டுள்ளது. வீடுகளைக் கட்டப் போதியவாறு பணவசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இவற்றை விட சமூக, கலாசார ரீதியாகப் பெண்கள் போரின் பின்னர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 இளம் விதவைகள் பாடு, அதுவும் குழந்தைகளுடன் இருக்கையில் கணவன்மார்களை இழந்த பெண்களின் பாடு மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றது. முன்னைய பெண் போராளிகளும் பல சமூகப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. எமது தமிழ்ச் சமூகமானது இவர்கள் யாவரையும் ஒதுக்கி வாழத் தலைப்படுவது எமது பாரம்பரியத்திற்கு ஒரு பெரும் இழுக்காகவே அமைகின்றது. எனவே எமது சமூகப் பார்வை மாற்றப்பட வேண்டும் என்றார்.


0 கருத்துக்கள் :