பெண் படையினர் துன்புறுத்தப்படும் காணொலி – உண்மை என்று ஒப்புக்கொண்டது சிறிலங்கா இராணுவம்

23.3.14

இணையத்தில் வெளியான பெண் படையினர் துன்புறுத்தப்படும் காணொலி தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறிலங்காப் படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாகத் தகவல் வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,
“யுரியூப்பில் வெளியான காணாலி உண்மையானதே.

குற்றம் செய்தவர்களுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த காணொலி தொடர்பாக விசாரணை நடத்திய இராணுவக் காவல்துறையினர் அது உண்மையானது என்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தக் காணொலி அனுராதபுரத்தில் பெண் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படும் இடத்தில், 2012 ஒக்ரோபர் மாதம் பதிவ செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி பெறும் பெண் படையினர், துன்புறுத்தப்படுவதும், தாக்கப்படுவதும், இதில் பதிவாகியுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையில், இராணுவ ஒழுக்க விதிமுறையை மீறியவர்களை பயிற்றுவிப்பாளர்கள் தண்டித்ததாக தெரியவந்துள்ளது.

எனினும் அதற்கு கையாளப்பட்ட வழிமுறை தவறானது.
அவர்கள் தமது ஆணையை மீறும் வகையில், இந்த மீறல்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பயிற்றுவிப்பாளர்களின் தண்டனை வழிமுறைகள், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப இருக்கவில்லை.

இந்த அவதானிப்புகளின் அடிப்படையில், இராணுவ சட்டங்களை மீறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :