தீர்மான வரைவு குறித்த எதிர்மறைக் கருத்துகளால் நாடுகள் மத்தியில் குழப்பம் – சுமந்திரன் விளக்கம்

15.3.14

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள வரைவு தொடர்பாக, தமிழர் தரப்பிலுள்ள சிலர் வெளியிடும் எதிர்மறையான கருத்துகளால், தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் குழப்பமடைந்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மான வரைவு தொடர்பான நகர்வுகள் தொடர்பாக அவர், அங்கிருந்து வழங்கியுள்ள செவ்வியில் மேலும் கூறியுள்ளதாவது-
அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள வரைவு சம்பந்தமாக பல்வேறு சந்திப்புக்கள் ஜெனீவாவில் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

அவை அனைத்தும் பயனுடையதாகவே இருக்கின்றன.
ஆகையால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அனைத்து தரப்பினருக்கும் தீவிரத்தன்மை கொண்டவர்களுக்கும் பகிரங்கமான வேண்டுகோள் ஒன்றை நான் விடுக்க விரும்புகின்றேன்.
அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள வரைவு (தீர்மானம்) தரக்கூடிய முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் யாரும் செயற்படக் கூடாது.
ஏனெனில் தீர்மானத்தை கடுமையாக விமர்சனம் செய்து சிலர் குழப்ப நிலையை உருவாக்கி வருகிறார்கள்.

இந்த தீர்மானத்தில் பயனில்லை, வலுவிழந்த இந்த தீர்மானத்தால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை, இலங்கையில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்துவதற்கான ஒரு தீர்மானமே தவிர இதனால் தமிழ் மக்களுக்கு பயனில்லை என்ற கடுமையான கருத்துக்கள்,அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கவிருக்கின்ற நாடுகள் மத்தியில் ஒரு குழப்பநிலையை உருவாக்கியிருக்கிறது.
இலங்கை பிரச்சினை இன்னதுதான் என முழுமையாக பிரச்சினையை அறிந்து கொள்ளாத நாடுகள் இங்கு பலவுள்ளன.
அவையெல்லாம் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கவே காத்திருக்கின்றன.
அரசாங்கமும் அதே பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கமும் விரும்பவில்லை, தமிழ் மக்களும் விரும்புகின்றார்களில்லை, இப்படி இரு பக்கத்தாரும் விரும்பாத ஒரு தீர்மானத்துக்கு நாம் ஏன் ஆதரித்து வாக்களிக்க சொல்கிறீர்கள் என பல நாடுகளின் பிரதிநிதிகள் எம்மிடம் கேட்கின்றனர். சந்தேகம் எழுப்புகின்றார்கள்.
எனவேதான் தங்களைத் தீவிரத்தன்மை கொண்டவர்கள் எனக் காட்டிக் கொள்ளும் தமிழ்த் தலைவர்கள் இந்த தீர்மானத்தை விமர்சிப்பதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு நன்மை செய்து விடக்கூடாது.
அப்படியான கைங்கரியங்களில் ஈடுப்பட்டால் அது தமிழ் மக்களுக்கு செய்கின்ற துரோகமாகவே இருக்கும்.
காலம் கனிந்து வருகின்ற நேரத்தில் எதையுமே குழப்பி விடக்கூடாது.
எல்லா விடயங்களுமே படிப்படியாக நடந்தே தீரும். எல்லாம் உடனடியாக நடக்குமென்று எதிர்பார்க்க முடியாது.
காரியம் கனிந்து வருகின்ற நேரத்தில் இப்பழம் கூடாது புளிக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் நாம் எதையுமே சாதிக்க முடியாது.

எனவேதான் வாக்கெடுப்புக்கு விடும் வரை அமைதியும் பொறுமையும் காக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த தீர்மானத்தில் அனைத்துலக விசாரணை உள்ளடக்கப்பட்டிருக்கின்றது என்பதனாலேயே தலைவர் இரா.சம்பந்தன் அவர்களும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களும் தீர்மானத்துக்கு எல்லோரும் ஆதரவு நல்க வேண்டுமெனவும், இது முன்னேற்றகரமான தீர்மானம் இந்த தீர்மானத்தில் அனைத்துலக விசாரணைக்கான சாத்தியம் இருக்கின்றது, இதைவிடக்கூடாது, தொடர்ந்து வலுப்படுத்த வேண்டுமே தவிர பயனற்றது என விலத்த முடியாது எனக்கூறியிருந்தார்கள்.
எனவேதான் அனைத்துலக விசாரணை உள்ளடக்கப்பட்டிருக்கும் இந்த தீர்மானத்தை அவசரப்பட்டு பிரயோசனமற்ற தீர்மானம், அமெரிக்கா கைவிட்டுவிட்டது, அனைத்துலகம் ஏமாற்றி விட்டது என்று ஆதரிக்கும் நாடுகளுக்கு சலிப்பு ஏற்படும் வண்ணமாக தமிழ் தரப்பினர் விமர்சனம் செய்ய கூடாது என எதிர்பார்க்கின்றோம்.

இம்முறை தீர்மானம் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பொறுப்பில் மேற்படி விசாரணைகள் மேற்கொள்ள வழிவகுக்கிறது.
அது அனைத்துலக சுயாதீன விசாரணையாகவே இருக்கும்.
அமெரிக்க வரைவு எங்கள் கையில் வந்தவுடன் அதன் நகலைப் பார்த்தோம்.
இரண்டு இடங்களில் அனைத்துலக விசாரணை பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐவரிகோஸ்ட்டிலும் சிரியாவிலும் இப்படியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னரே, அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆகையால் இதற்கு முன் உதாரணங்களும் இருக்கின்றன.
ஆரம்பத்தில் நாம் அமெரிக்காவுடன் கதைத்த போது எப்படியான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென கேள்வி எழுந்தது.
தீர்மானத்தில் அனைத்துலக விசாரணையென்ற வசனத்தை பாவித்தால் பல நாடுகள் அதற்கு ஆதரவு வழங்க தயங்கும் தீர்மானம் வெற்றி பெறுவதற்கான தேவையான வாக்குகளைப் பெறுவதில் கஷ்டமாக இருக்கும்.
இதன் காரணத்தினால் தான் முன்னுதாரண நாடுகளான ஐவரிகோஸ்ட்டிலும் சிரியாவிலும் நடைபெற்ற முன்னுதாரணங்களை எடுத்துக் காட்டியிருந்தோம்.
இவ்விதமாக தீர்மானத்தை நிறைவேற்றினால் தேவையான ஆதரவை ஜெனிவாவில் பெறமுடியுமெனத் தெரிவித்த பின்புதான் எமது சிபாரிசுகளை முன் வைத்தோம்.
அமெரிக்காவும் பல நாடுகளுடன் கலந்தாலோசனை செய்த பின்பு இந்த முடிவுக்கு வந்தது.
தீர்மானத்தில் அனைத்துலக விசாரணையென்ற வார்த்தைப் பிரயோகம் பாவிக்கப்பட்டால் அதற்கு சரியான வியாக்கியானத்தை கொடுக்க வேண்டியிருக்கும்.
எப்படியான விசாரணை செய்யப்பட வேண்டும். அந்த விசாரணைக் குழுவுக்கான அதிகாரம் என்ன, என்ற விடயங்கள் எல்லாம் அந்த தீர்மானத்தில் சொல்லப்பட வேண்டும். அதற்குரிய வாக்குகளும் பெறப்பட வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் குறைந்த அதிகாரங்களைப் பாவிக்க வேண்டிய சூழ்நிலையும் வந்து விடும்.
இவையெல்லாவற்றையும் கவனத்தில் கொண்டே அனைத்துலக நாடுகளின் வாக்குப்பலத்துடன் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற காரணத்தின் அடிப்படையில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரை தலைவராகக் கொண்ட ஒரு ஆணைக்குழுவிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அவரே என்ன மாதிரியான விசாரணை நடாத்தப்பட வேண்டும், விசாரணைக் குழுவுக்கு எத்தகைய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் இறுதி முடிவை எடுக்கக் கூடிய அதிகாரம் உள்ளவராக இருப்பார்.

எனவே தான் அனைத்துலக விசாரணையென்ற விடயத்தை விட மனித உரிமை ஆணையாளர் தலைமையிலான விசாரணை சிறப்பானதாகவும் சுதந்திரமானதாகவும் இருக்குமென்ற நம்பிக்கையின் பேரில் நாங்கள் சில திருத்தங்களை நகலில் முன் வைத்தோம்.
அதாவது மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த தீர்மானத்தின் மூலம் அனைத்துலக சுயாதீனமான விசாரணையை நடத்துவதற்கான அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழாமல் அவரே தனது அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தும் வகையில் தரப்பட்ட நகலில் பழைய முன் உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு சில சொற்பதங்களை மாற்றக் கேட்டிருக்கின்றோம்.
இத்தகைய திருத்தங்களை நாம் கோரியிருக்கின்றோம்.

மனிதஉரிமை ஆணையாளர் நாயகத்தின் அதிகாரத்தை ஒருவரும் கேள்விக்கு உட்படுத்தாத வகையில் விரிவான ஒரு தீர்மானமாக இருக்கலாமென்ற சொற்பதங்களை நாங்கள் உண்டாக்கி இருக்கின்றோம்.
இந்த சின்ன சின்ன திருத்தங்களையே அமெரிக்கா தனது நகலில் செய்து கொண்டிருக்கின்றது.
அந்த திருத்தங்கள் வருகின்ற போது மேற்படி தீர்மானம் நிறைவேற்றக் கூடியதாக இருக்கும் ஆகையினால் தான் அந்த வேலையை செய்வதற்காக மீண்டும் நான் ஜெனிவாவுக்கு வந்துள்ளேன்.
தீர்மான வரைவில் இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் சட்டநுணுக்கம் கொண்டவை. ஒவ்வொரு சொல்லுக்கும் அனைத்துலக சட்டத்தில் வரைவிலக்கணம் இருக்கும்.
சாதாரண மொழியில் பாவிக்கும் வார்த்தைகள் போல அல்லாது சட்டத்தில் அந்த வார்த்தைகளுக்கு விசேட கருத்துக்கள் தரப்படலாம்.

அவற்றை ஆராய்ந்து அதற்கு ஏற்ற விதத்தில் தீர்மானத்தை முன்னெடுப்பதற்காகவே நான் மீண்டும் ஜெனிவாவுக்கு வரவேண்டியிருந்தது.
ஒரு நாடு இன்னுமொரு நாட்டுக்கு தீங்குவிளைவிப்பதற்கான அமைப்பாக ஜெனிவா மனிதஉரிமைப் பேரவை அமைக்கப்படவில்லை.

ஒவ்வொரு நாடும் தன்னுடைய சுயாதீனத்தையும் இறைமையையும் இழந்து விடக் கூடாது என நினைப்பவர்கள் இந்த அமைப்பினர்.
அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் இலங்கைக்கு நன்மை கொண்டு வரும் தீர்மானமாகவே கருத வேண்டும்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்று கருதினால் அது தவறான கருத்தாகும்.
நாங்களும் இலங்கைக்கு நன்மையைக் கொண்டு வரவே நினைக்கின்றோம்.
குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையாயின் அது ஒரு நல்ல நாடாக அமையாது.
ஏதாவது நடந்தால், நடத்தப்பட்டால் அதற்கான விளைவை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.
நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்பட வேண்டுமென்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புமாகும்.
அந்த கோணத்தில் தான் அனைத்துலக நாடுகள் இந்த தீர்மானத்துக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டு வருகின்றோம்.

விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படுவது இலங்கைக்கு நல்ல விடயமாகவே அமையப் போகிறது என்பதை விளக்க வேண்டும்.
அதனால் தான் அறிக்கையை அந்தக் கோணத்திலிருந்து ஒரு நல்ல செய்தியாக பார்க்கிறோம்.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் நடைபெற்ற குற்றங்களை மூடி மறைக்க முடியாது.

அது வெளிக்கொண்டு வரப்பட்டு அதற்கான சரியான அணுகுமுறையைக் கொண்டு வந்து விசாரணை நடாத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட்டு உண்மையின் அடிப்படையில் மக்களின் நலனும் நல்லிணக்கமும் ஏற்படுத்தப்படுவதே சரியான நல்லிணக்கமாக அமைய முடியும்.
இந்த எதிர்பார்ப்பை தமிழ் மக்கள் அடைய வேண்டுமானால் பொறுமையுடனும் கவனமாகவும் செயல்பட வேண்டுமென நினைக்கிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வழிமூலம் - வீரகேசரி

0 கருத்துக்கள் :