சிறிலங்கா காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு – தர்மபுரத்தில் பதற்றம்

14.3.14

கிளிநொச்சி, தர்மபுரத்தில், நேற்றுப் பிற்பகல், சந்தேக நபர் ஒருவரைத் தேடிச்சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து சென்ற பயங்கரவாத தடுப்புப்பிரிவின் சிறப்புக் குழு மீதே, தர்மபுரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து, தப்பிச்சென்ற சந்தேக நபரைக் கைது செய்வதற்காக சிறிலங்கா படையினரும், காவல்துறையினரும் நேற்று பிற்பகல் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட சந்தேக நபர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்றும், சம்பவ இடத்தில் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது.
இதற்கிடையே, குறிப்பிட்ட சந்தேகநபர், தப்பிச் சென்ற பகுதியில் உள்ள, வீட்டை சிறிலங்கா காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளதாகவும், இதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகவுத தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வீட்டில் இருந்த, தாயும் மகளும், தனியாக அடைத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
ஜெயகுமாரி என்ற பெண்ணும், அவரது 13 வயதுடைய மகளுமே இராணுவ, மற்றும் காவல்துறையின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல்போன தனது கணவன் மற்றும் மகனுக்காக ஜெயக்குமாரி, அவரது மகள் விபூசிக்காவுடன் பல போராட்டங்களில் பங்கெடுத்தவராவார்.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்திலும் பங்கெடுத்த்துடன், 'சனல்4' போன்ற பல அனைத்துலக ஊடகங்களில் காணாமற்போனோரின் உறவுகள் சார்பில் பகிரங்கமாக குரல் கொடுத்து வருபவர்களாவர்.

இதற்கிடையே, இந்தச் சம்பவத்தில், தப்பிச்சென்ற, சந்தேக நபர், பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால், தேடப்படுவதாக அறிவிக்கப்பட்ட காசியன் அல்லது கோபி என்று அழைக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்வநாயகம் (வயது - 31) என்பவரே என்றும் தகவல்கள் கூறுகின்றன.

0 கருத்துக்கள் :