தீர்மானத்தைப் பலவீனப்படுத்த வேண்டாம் - டெல்லியின் கதவைத் தட்டுகிறது கூட்டமைப்பு

7.3.14

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை, பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்றும், இந்தியாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரவுள்ளது.

கடந்த புதன்கிழமை, நாடாளுமன்றக் கட்ட்டத்தொகுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே, இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைவு குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதையடுத்தே, விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று புதுடெல்லிக்குச் சென்று, இந்திய அதிகாரிகளை சந்திக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு முன்னைய தீர்மானங்களை விட வலுவானது என்றும், இதனை பலவீனப்படுத்த முனையாமல், பலப்படுத்தும் முயற்சிகளில் இறங்குமாறு இந்தப் பயணத்தின் போது இந்தியாவைக் கேட்டுக் கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த தீர்மான வரைவை மேலும் வலுப்படுத்துவதற்கு, மேற்கு நாடுகளுடன் பேச்சு நடத்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

வரும் நாட்களில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் இதுதொடர்பாக கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :