லண்டன் பயணத் திட்டத்தில் இருந்து பின்வாங்கினார் மகிந்த – பீரிசை அனுப்பினார்

10.3.14

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் இன்று நடக்கும், கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கொண்டாடப்படும் கொமன்வெல்த் நாளை முன்னிட்டு, லண்டனில் வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, சிறப்பு ஆராதனை மற்றும், கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஸ் சர்மா ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு உபசாரத்தில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்பார் என்று கொமன்வெல்த் செயலகம் முன்னர் அறிவித்திருந்தது.

கொமன்வெல்த் அமைப்பின் தலைவர் என்ற வகையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரித்தானிய மகாராணி எலிசபெத்துடன் இணைந்து இந்த நிகழ்வுகளுக்குத் தலைமையேற்கவிருந்தார்.

எனினும், சிறிலங்கா அதிபரின் லண்டன் பயணம் கைவிடப்பட்டுள்ளதுடன், அவருக்குப் பதிலாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஜெனிவாவில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கெற்கும் சிறிலங்கா குழுவுக்குத் தலைமையேற்றுச் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், அங்கிருந்து நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் லண்டன் பயணத்தை முன்னிறுத்தியே, பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி நேற்று புதிய போர்க்குற்ற ஆதாரத்தை வெளிப்படுத்தியதாக கருதப்படுகிறது.

எனினும், சிறிலங்கா அதிபரின் பயணம் கைவிடப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு இந்தப் பயணத்திட்டம் கைவிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

0 கருத்துக்கள் :