தமிழீழ கோரிக்கையை முன்வைத்து பிரித்தானியாவில் புதிய கட்சி /வீடியோ

17.3.14

பிரித்தானியாவில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து புதிய கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஆம் இவ்விடையம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தலாம். ஆனால் இது தான் உண்மை. நாம் ஜெனீவா ஐ.நா முன்னர் நின்று ஆர்பாட்டம் செய்கிறோம், ஆனால் உள்ளே செல்லவில்லை. பிரித்தானிய பாராளுமன்றம் முன்னதாக நின்று ஆர்ப்பாட்டம் செய்கிறோம் ஆனால் உள்ளே எமது தமிழ் பிரதிநிதியாக எம்.பி எவரையும் அனுப்பியது இல்லை,  ஆகவே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என்று, நஷனல் லிபரல் பார்டி ( National Liberal Party)  தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் என்றும், சர்வதேச நாடுகள் இணைந்து தமிழர்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் என்றும் எதிர்பார்த்து காத்திருந்து தமிழர்கள் ஏமாந்து போனது தான் மிச்சம். இந்நாடுகள் இலங்கை அரசுக்கு மேலதிக கால அவகாசத்தை அள்ளி வழங்கிவருகிறது. இதேவேளை இந்த கால அவகாசத்தை பாவித்து, சிங்கள அரசு படுவேகமாக தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து வருகிறது.
தற்போதைய சூழலில், உலகில் உள்ள பாதிக்கப்பட்ட சமூகங்களோடு நாம் இணைந்து போராடியே எமது, லட்சியத்தை வெல்வதே தமிழர்களுக்கு ஒரே வழியாக உள்ளது. இதனை நன்கு உணர்ந்த மற்றும் தமிழர்களால் நன்கு அறியப்படுகின்ற, கிரகாம் வில்லியம்ஸன், தற்போது ஒரு கட்சியை பிரித்தானியாவில் பதிவுசெய்துள்ளார்.

அதில் பாதிக்கப்பட்ட இனத்தவர்கள் பலர் அடங்குகிறார்கள். ஈழத் தமிழர், சீக்கியர், போடியர்கள், குருதிஷ்கான், அரபியர், அடங்குகிறார்கள். லண்டனில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அதேபோல சீக்கியர்களும் பலர் வசித்து வருகிறார்கள். போடியர்கள், குருதிஷ்கான் மக்கள் என்று பல லட்சம்பேர் இருக்கிறார்கள். இவர்களை அனைவரையும் இணைத்தே இக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சியாக இருக்கிறது. ஈழத்தில் சுயாதீன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டும். தமிழர்கள் அதனூடாக எதனைக் கூறுகிறார்களோ அதனைச் செயல்படுத்தவேண்டும் எனவும், மற்றும் தமிழீழமே இறுதி தீர்வு என்று மக்கள் ஏற்றுக்கொண்டால் , தமது கட்சி அதனை வெளிப்படையாகவே ஆதரிக்கும் என்று கிரகாம் வில்லியம்ஸன் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள 3 பெரும் கட்சிகளும், ஒருபோதும் தமிழீழத்தை வெளிப்படையாக ஆதரித்தது இல்லை. ஒரு நாட்டை பிளவுபடுத்தும் வேலையை அவர்கள் எப்போதும் செய்யமாட்டார்கள். குறித்த நாட்டுடன் அவர்கள் உறவை மேற்கொள்ளவே விரும்புவார்கள். இப்படி தான் பல நாட்டு அரசாங்கங்கள் இயங்குகின்றன.

இருப்பினும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தமது கட்சி நிச்சயம் உதவும் எனவும், வரும் மேமாதம் நடக்கவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாகவும் கிரகாம் வில்லியம்ஸன் அறிவித்துள்ளார். அதற்கு அமைவாக அவர் தனது கட்சியில் உள்ள 8 பேரை அறிவித்தும் உள்ளார். இதில் ஒரு தமிழரும் அடங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
எனவே வரும் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில், தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கு எவர் குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிப்பது நல்லது. ஒடுக்கப்படுகின்ற இனத்தோடு இணைந்து, நாமும் போராடடிவேண்டும் என்றால்... தமிழர்களாகிய நாம, என்.எல்.பி (National Liberal Party) கட்சியின் கரங்களை வலுப்படுத்தவேண்டும்.

0 கருத்துக்கள் :