சர்வதேச விசாரணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது : அமெரிக்க செனட் குழு

30.3.14

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்ற போர்க்குற்றங்கள் மீது ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு இப்போது அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமெரிக்க செனட் வெளிவிவகாரக் குழுத் தலைவர் றொபேட் மெனன்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நியூஜேர்சி மாநிலத்திற்கான அமெரிக்க மேலவையின் இரண்டு செனட்டர்களில் ஒருவரான றொபேட் மெனன்டஸ் கடந்த வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஐக்கிய அமெரிக்காவினால் இணைந்து பிரேரிக்கப்பட்டு, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலினால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நான் வாழ்த்துகிறேன்.

இலங்கையில் நடந்த விடயங்களுக்கான பொறுப்புக் கூறல் என்பது எப்போதோ நடந்திருக்க வேண்டியது. இருதரப்பாலும் செய்யப்பட்ட பாரதூரமான மனித உரிமைகள் மீறல்களுக்கான பொறுப்புக் கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை ஒரு சுயாதீனமான ஐ.நா. விசாரணை இப்போது சாத்தியமாக்கும் என்று நான் நம்புகின்றேன்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளருக்கு நான் ஒரு மடல் வரைந்திருந்தேன்.

இந்தப் பிரேரணைக்கான எனது ஆதரவை நான் அவருக்கு உறுதிப்படுத்தியிருந்ததுடன், பொதுமக்கள் சமூகம் செயற்படுவதற்கான சூழலின் இயல்புத் தன்மை இலங்கையில் குறைந்து வருவதையிட்டு எனது கவலையையும் நான் அந்தக் கடிதத்தில் அவரது கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தேன்.

இலங்கையிலே – ஊடகத்துறையினர், மனித உரிமைகள் காப்பாளர்கள் மற்றும் சிறுபான்மை மதத்தவர்களுக்கான சூழல் மோசமடைந்து வருவதையிட்டு நான் எப்போதும் மிகவும் கவலையுடனும் கரிசனையுடனும் உள்ளேன்.

அதனால் முக்கியத்துவம் மிக்க இந்த விவகாரங்களைக் கவனத்தில் எடுத்து, அவற்றைச் சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தையும் நான் கேட்டுக் கொள்கின்றேன் - என்றார்.

0 கருத்துக்கள் :