கறுப்பு ஜூலையில் தமிழர்களின் நகைக் கடைகளை கொள்ளையிட்ட நடிகர்: அம்பலப்படுத்திய அமைச்சர்

31.3.14


ஸ்திரத்தன்மையற்ற நாடுகளே மேற்குலக நாடுகளுக்கு அவசியம் எனவும் இந்த நாடுகள் இணைந்து மத்திய கிழக்கில் ஆட்சியாளர்களை விரட்டிய, அனைத்து நாடுகளும் தற்போது ஸ்திரமற்ற நிலைமையில் இருப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது ஐக்கியமாக முன்னோக்கி செல்வதால், நாட்டில் இனங்களுக்கு இடையில் மீண்டும் பிளவுகளை உருவாக்கும் தேவை மேற்குலக நாடுகளுக்கு இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

  அவர் மேலும் தெரிவிக்கையில், 
இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தேவை மேற்குலக நாடுகளுக்கு இல்லை.
அமைதி, நல்லிணக்கம் என்ற வார்த்தைகளை முன்னால் போட்டு நாட்டில் காணப்படும் நல்லிணக்கத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் தேவை.
மத்திய கிழக்கு நாடுகளில் தலையீடுகளை மேற்கொண்ட மேற்குலக நாடுகள் அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் கெட்டவர்கள் எனக் கூறி அவர்களை விரட்டின.

அங்கு இவர்கள் சிறந்த நாடுகளையா உருவாக்கினர்?. லிபியா, எகிப்து போன்ற நாடுகளுக்கு இன்று என்ன நேர்ந்துள்ளது?. அந்நாடுகளில் தினமும் ஒருவருக்கு ஒருவர் கொலை செய்து கொள்கின்றனர்.
ஒரு நாள் இருக்கும் ஆட்சியாளர் மறுநாள் இல்லை. அந்நாடுகள் சீரழிந்து போயுள்ளன.
அதேவேளை கறுப்பு ஜூலை கலவரம் காரணமாகவே புலம்பெயர் தமிழர்கள் என்ற ஒரு அணி உருவாகியது.
அது மாத்திரமல்ல தற்கொலை குண்டுதாரிகள் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதாலும் இந்த நிலைமை உருவாகியது.

கறுப்பு ஜூலை கலவரம் என்பது சாதாரண மக்களால் உருவாக்கப்படவில்லை. 13 இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்குவதாக கூறி, இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு விடுமுறை வழங்கி விட்டு, தமது குண்டர்களை பயன்படுத்தி கறுப்பு ஜூலை கலவரம் ஏற்படுத்தப்பட்டது.
அன்று ஆட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.
நாடாளுமன்றத்தில் ஒரு நடிகர் இருக்கின்றார். அவர் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் வீட்டுப் பணிப் பெண்கள் பற்றி அதிகமாக பேசி வருகிறார்.

நீர்கொழும்பில் கடை ஒன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் அந்த நடிகர் பெயர் பொலிஸ் முறைப்பாட்டு ஏட்டில் உள்ளது.
கறுப்பு ஜூலை கலவரத்தின் போது வன்சொட் என்ற இந்த நடிகர் நீர்கொழும்பில் உள்ள தமிழர்களின் கடைகளில் கொள்ளையிட்டுள்ளார்.

அலவாங்கை கொண்டு நகை கடையில் இருக்கும் பெட்டகத்தை உடைத்து நகைகளை கொள்ளையிட்டதாக பொலிஸ் முறைப்பாட்டு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள்தான் இன்று ஐக்கியம் பற்றி பேசுகின்றனர் என அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :