புலிகள் இயக்கம் தலைதூக்குமென்றால் அரசாங்கமே பொறுப்பு:ஜே.வி.பி.

24.3.14

வடக்கில் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கமோ அல்லது வேறு ஏதாவதொரு பிரிவினைவாத இயக்கமோ தலைதூக்குமென்றால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென குற்றம் சாட்டும் ஜே.வி.பி. வடக்கிலும் தெற்கிலும் மனித உரிமை மீறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் ஜெனீவாவிற்கான சாட்சியங்களை அரசே வழங்குகின்றது என்றும் அக்கட்சி தெரிவித்தது.

  இது தொடர்பாக ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் தாம் சொல்வது, என்ன செய்வது என்ன என்பது தெரியாமல் தலைகீழாக தடுமாறுகிறது. தெற்கில் மக்களினதும் மாணவர்களினதும் நியாயமான போராட்டங்களை கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் மூலம் நிறுத்துகின்றது. பொலிஸாரால் கைது செய்யப்படுபவர்கள் காணாமல் போகின்றனர். பின்னர் சடலமாக கண்டுபிடிக்கப்படுகின்றனர். இவ்வாறு பல்வேறு விதமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. அதேபோன்று வடக்கிலும் இன்று தமிழ் மக்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. வகை தொகையில்லாமல் மக்கள் கைது செய்யப்படுகின்றனர்.

அம் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழும் நிலைமையை அரசு உருவாக்கியுள்ளது. இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் அமெரிக்கா முன் வைத்துள்ள பிரேரணையை தோல்வியடையச் செய்ய வேண்டுமென உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உணர்வுபூர்வமாக கருத்துகளை வெளியிடும் அரசாங்கம் மறுபுறம் வடக்கிலும் தெற்கிலும் மனித உரிமை மீறல்களை அரங்கேற்றி ஜெனீவாவிற்கு சாட்சியங்களை வழங்குகின்றது. மீண்டும் பயங்கரவாதம் வடக்கில் மீண்டும் விடுதலை புலிப் பயங்கரவாதம் தலைதூக்கி வருவதாக படைத்தரப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர். அவ்வாறு புலிகள் அமைப்போ அல்லது வேறு பிரிவினைவாத இயக்கமோ தலைதூக்குமென்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  ஏனென்றால் யுத்தம் முடிந்த பின்னர் அரசாங்கம் வடபகுதி தமிழ் மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தையோ சுதந்திரத்தையோ வழங்கவில்லை. மாறாக வடக்கு தமிழ் மக்களை அடக்கி ஆளும் கைங்கரியத்தையே முன்னெடுத்தது. இதன் காரணமாக தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் இணையும் சூழ்நிலையையும் அரசாங்கம் ஏற்படுத்தியது. அவ்வாறு தமிழ் மக்கள் பிரிவினைவாத சக்திகளின் கைதிகளாக மாறும் நிலைமையை அரசாங்கமே உருவாக்கியது. எனவே, மீண்டும் புலிகளோ அல்லது வேறு பிரிவினைவாத அமைப்போ உருவாகுமென்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :