பிரேரணை நிறைவேறினாலும் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் : பீரிஸ்

20.3.14

ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் பிரேரணையின் உள்ளடக்கங்கள் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளன. எமது நாட்டின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான பொறுப்பை நாம் வெளிநாடுகளிடம் ஒப்படைக்க முடியாது. இங்குள்ள அரசாங்கமே அவற்றை முன்னெடுக்க முடியும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.


ஜெனிவாவில் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது என்பதற்காக பயந்துகொண்டு இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு செயற்பாடுகளில் விட்டுக்கொடுப்புக்களை செய்யமுடியாது. மக்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை நிலைமைகள் குறித்து ஏற்கனவே தீர்மானம் எடுத்துவிட்ட மற்றும் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட நவநீதம் பிள்ளையிடம் விசாரணை நடத்துமாறு ஒப்படைக்க முடியுமா? என்றும் அமைச்சர் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் பீரிஸ் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது,

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை இனறு அரசியல்மாகிவிட்டது. மனித உரிமை விடயம் என்பது இன்று அரசியல் நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. இலங்கைக்கு எதிராக ஏற்கனவே இரண்டு தடவைகள் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. தற்போது மூன்றாவது தடவையாகவும் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது. அதாவது ஜெனிவாவில் தற்போது சமத்துவமான தன்மை இல்லை.

இலங்கை எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் பிரேரணை கொண்டுவருகின்றனர். எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் யாரும் தீர்மானம் எடுக்க முடியாது. மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமே அந்தத் தீர்மானங்களை எடுக்கலாம்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 47 நாடுகள் உள்ளன. அவறறில் 13 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவையாகும். இந்நிலையில் எந்தவொரு விடயம் குறித்தும் இந்த நாடுகள் ஒருமித்தே முடிவு எடுக்கின்றன. இந்நிலையில் சமத்துவத்தை எவ்வாறு மனித உரிமைப் பேரவையில் எதிர்பார்க்க முடியும்? சம சந்தர்ப்பங்கள் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.

இலங்கையை ஆதரிப்பதனாலேயே இவ்வாறு செய்வதாக மேற்கு நாடுகள் கூறுகின்றன. ஆனால் அவ்வாறு கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும். தமது நாடுகளின் அதிகாரம் மற்றும் பணம் என்பனவற்றுக்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களில் இலங்கை பாரிய முன்னேற்றத்தை வெளிக்காட்டியுள்ளதாக உலக நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவின் யோசனை என்பதால் இந்த நாடுகள் அதற்கு ஆதரவளிக்கின்றன. அது தவறான செயற்பாடாகும். அனைத்து நாடுகளும் சுதந்திரமாக முடிவு எடுக்கவேண்டும் என்பதற்காகவே மனித உரிமைப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விதிமுறையானது முழுமையாக மீறப்பட்டுவருகின்றது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின் எட்டாவது பந்திலேயே முக்கியமான விடயங்கள் உள்ளன. அதில் இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்தவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை நிலைமைகள் குறித்து ஏற்கனவே தீர்மானம் எடுத்துவிட்டார். மற்றும் இலங்கை விடயத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட நவநீதம் பிள்ளையிடம் விசாரணை நடத்துமாறு ஒப்படைக்க முடியுமா? யுத்தம் முடிவடைந்து ஐந்து நாட்கள் கடந்த நிலையிலேயே சர்வதேச விசாரணை அவசியம் என்பதனை நவநீதம் பிள்ளை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்ட நவநீதம் பிள்ளையிடம் விசாரணை செயற்பாடுகளை ஒப்படைக்க முடியுமா?

ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு முகம்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஜெனிவா நிலைமைகளுக்கு முகம்கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஒரு வேலைத்திட்டம் உள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் மக்கள் சர்வதேசத்துக்கு சிறந்த பதிலை வழங்கவேண்டியது அவசியமாகும். சர்வதேசத்தினால் இந்த நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டுசெல்ல முடியாது என்பதனை மக்கள் உணர்த்தவேண்டும்.

இன்று சர்வதேச மட்டத்தில் புலிகளிடம் பாரிய நிதி உள்ளது. யுத்த காலத்தில் அவர்களின் நிதி செலவழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது யுத்தம் இல்லை என்பதால் நிதியை வைத்து அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிக்கின்றனர். அதன் விளைவுகளையே தற்போது நாம் அனுபவிக்கின்றோம்.

கேள்வி ஜெனிவாவில் தற்போது இலங்கையின் நிலைமை எவ்வாறு உள்ளது?

பதில் எமது நிலைப்பாட்டை மிகைப்படுத்தி கூற முடியாது. ஆனால் நான் கூறியதைப்போன்று 47 நாடுகளில் 13 நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். அந்தவகையில் பார்க்கும்போது ஜெனிவா மனித உரிமைப் பேரவை அரசியல்மயமாகிவிட்டது.

கேள்வி பிரேரணையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அப்படியாயின் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் என்ன செய்வீர்கள்?

பதில் அதனை ஏற்க முடியாது. ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் பிரேரணையின் உள்ளடக்கங்கள் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளன. எமது நாட்டின் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாம் வெளிநாடுகளிடம் ஒப்படைக்க முடியாது. இங்குள்ள அரசாங்கமே மேற்கொள்ள முடியும்.

கேள்வி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில் ஜெனிவாவில் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது என்பதற்காக பயந்துகொண்டு இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு செயற்பாடுகளில் விட்டுக்கொடுப்புக்களை செய்யமுடியாது. மக்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். கடந்த 30 வருடங்களாக நாங்கள் பயங்கரவாதம் காரணமாக கஷ்டப்பட்டுள்ளோம்.

எனவே மேலும் கஷ்டப்பட முடியாது. அதனால் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது. எனவே இந்த விடயத்தில் அவதானமாக இருப்போம். அவ்வான ஆபத்தான நிலைமைக்கு இடமளிக்க முடியாது. குறிப்பிட்ட வீட்டில் ஆயுதங்கள் இருந்துள்ளன. எனவே விசாரணைகள் செய்யப்படவேண்டும். மக்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்ககைள் எடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி பொருளாதார தடைகள் விதிக்கப்படும் அபாயம் உள்ளதா?

பதில் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட முடியாது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பொருளாதார தடைகளை வேண்டுமானால் நாடுகள் நாளை காலையே விதிக்கலாம். ஆனால் அவ்வாறு பொருளாதார தடைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்காவும் பிரிட்டனும் தெரிவித்துள்ளன.

மனித உரிமைப் பேரவையில் பொருளாதார தடை விதிக்கும் விடயம் வந்தால் அது பாதுகாப்புச் சபைக்கு செல்லவேண்டும். பாதுகாப்புச் சபைக்கு அந்த யோசனை சென்றால் அங்கு ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரங்களை பயன்படுத்தி அந்த முயற்சியை தடுத்துவிடும். எனவே பொருளாதார தடைகள் என்பது வராது என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

0 கருத்துக்கள் :