திருத்திய தீர்மான வரைவையும் ஏற்க முடியாது – நிராகரித்தது சிறிலங்கா

19.3.14

அமெரிக்கா முன்வைத்துள்ள திருத்தப்பட்ட தீர்மான வரைவையும் சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நேற்று ஜெனிவாவில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் மற்றும் பார்வையாளர் நிலையில் உள்ள ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுக்கான கூட்டம் ஒன்றை சிறிலங்கா ஒழுங்கு செய்திருந்தது.

இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா, மற்றும் ஜெனிவாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் சிறிலங்கா தரப்பு நியாயங்களை எடுத்து விளக்கியிருந்தனர்.
இதன்போதே, திருத்தப்பட்ட தீர்மான வரைவையும் சிறிலங்கா நிராகரிப்பதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை என்ற போர்வையில், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி, சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை பொறிமுறையை உருவாக்க முனைகிறது.
அமெரிக்க தீர்மான வரைவின் திருத்தப்பட்ட வடிவமும் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்த நகர்வு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிறுவக கோட்பாட்டை மீறுகிறது.
தீர்மானத்தை எதிர்த்த போதிலும், மோதல்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு உள்நாட்டு செயல்முறைகளின் மூலம், தீர்வு காண சிறிலங்கா உத்தரவாதம் அளித்திருந்தது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அமர்வின் போதும், அதற்குப் பின்னரும், ஆபிரிக்க வலய நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.

இன்று சிறிலங்காவுக்கு ஏற்பட்ட கதி, நாளை இன்னொரு நாட்டுக்கு ஏற்படும் என்பதை மறந்து விடக் கூடாது” என்றும் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :