பொறுப்புக்கூறலுக்கு இனிமேலும் பொறுத்திருக்க முடியாது - ஜோன் கெரி

28.3.14

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் சிறிலங்காவுக்கு மிகத் தெளிவான செய்தி எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
நேற்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் நிலைநாட்ட இதுவே தருணம்.
நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமாக இனிமேலும் பொறுத்திருக்க முடியாது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் மனிதஉரிமை பேணல் ஆகியன தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு முழுமையாக ஆதரவளிக்கத் தயார் என்பதையே இந்தத் தீர்மானம் வலியுறுத்தி நிற்கிறது.
இதன் காரணமாகவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவில் மனிதஉரிமை நிலைமைகளை கண்காணிக்குமாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போர்க்காலத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென அதில் கோரப்பட்டுள்ளது.
அனைத்து இலங்கையர்களினதும் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது.
அண்மையில் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் நெருக்குதல்களுக்கு உள்ளானமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
சிறிலங்காவில் உள்ள அனைவருக்காகவும் அமெரிக்கா குரல் கொடுக்கும். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
மொத்தமாக 41 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன.
தொடர்ந்தும் மூன்றாவது ஆண்டாக சர்வதேச சமூகம் சிறிலங்கா விவகாரத்தில் சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளமை புலனாகியுள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்ற விவகாரங்களில் சிறிலங்கா இனிமேல் நம்பகமானதும் காத்திரமானதுமான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாகவும் அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :