தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கைது செய்வதுடன் தடை செய்ய வேண்டும் :குணதாச

17.3.14

சம்பந்தனின் சூழ்ச்சியில் இலங்கை சிக்கி விட்டது. சர்வதேச விசாரணையினை கோரும் செயற்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கண்டுள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தவறினை சரி செய்யும் வரையில் நாட்டில் சிக்கல் நிலையே தொடரும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் சர்வதேச நாடுகளின் பிரேரணைகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் நோக்கமாகும். தனி தமிழ் ஈழத்தினை உருவாக்க கூட்டமைப்பு செய்து வரும் சூழ்ச்சி வலையில் இலங்கை அரசாங்கமும் மக்களும் சிக்கி விட்டனர். இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தினை திருப்பி இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை ஏற்படுத்தும் செயற்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கண்டு வருகின்றது.

இலங்கையில் வாழ்ந்து கொண்டு இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் பேசும் கூட்டமைப்பு உறுப்பினர்களை அரசாங்கம் கைது செய்ய வேண்டும். இது தேசத்துரோக செயற்பாடென தெரிந்தும் அரசாங்கம் கூட்டமைப்பினை விட்டு வைப்பதானது நாட்டில் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

யுத்தம் தொடங்குவதற்கும் வடக்கில் விடுதலைப் புலிகளை உருவாக்குவதற்கும் அடிப்படையாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அரசாங்கம் ஏன் இன்னமும் தடை செய்யாதுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் உள்நாட்டிலும் சர்வதேசத்தின் மத்தியிலும் குழப்பத்தினை ஏற்படுத்தி அரசாங்கத்தினையும் இராணுவத்தினையும் குற்றவாளிகளாக்கும் முயற்சியை நடைபெறுகின்றது.  எனவே நாட்டினையும் மக்களையும் சர்வதேசத்திடம் காட்டிக்கொடுத்து சர்வதேசத்தினை இலங்கைக்குள் கொண்டு வர முயற்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை கைது செய்வதோடு உடனடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

0 கருத்துக்கள் :