ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு

14.3.14

உக்ரைன் விவகாரம் எதிரொலியாக ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு செய்துள்ளன. அநேகமாக வரும் 17–ந்தேதி (திங்கட்கிழமை) இது அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவம் நுழைவு
உக்ரைன் நாட்டில் போராட்டம் வெடித்ததால் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் தப்பி ஓடினார். கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள் இடைக்கால ஆட்சி நடத்துகிறார்கள். இதனால் உக்ரைன் நாட்டில் தன்னாட்சி பெற்ற கிரீமியா பிரதேசத்தை ரஷிய ராணுவம் நுழைந்து கைப்பற்றிக்கொண்டது.
ரஷியாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை ஏற்க மறுக்கும் ரஷியாவோ கிரீமியாவில் வசிக்கும் தங்களது மக்களை காப்பாற்றுகிறோம் என்று வாதிடுகிறது. கருங்கடல் பகுதியில் ராணுவத்தை குவித்து வருகிறது.

இந்நிலையில் கிரீமியா பாராளுமன்றம் கூடி உக்ரைனில் இருந்து சுதந்திரம் அடைந்து விட்டதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதோடு ரஷியாவுடன் இணையலாமா? என்பது குறித்து வருகிற 16–ந்தேதி வாக்கெடுப்பும் நடத்துகிறார்கள்.
ஐரோப்பா பொருளாதார தடை
உக்ரைன் விவகாரத்தால் ரஷியாவிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்த பிரச்சினை வெளியான பிறகு இந்த நாடுகள் மேற்கொள்ள இருக்கும் முதல் நடவடிக்கையாகும்.

அதன்படி முதல் கட்டமாக பயணம் செய்ய தடை மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள ரஷிய நிறுவனங்கள், தனி நபர்களின் சொத்துகள், வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என தெரிகிறது. ரஷியர்கள் யார்–யார் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. புரூசெல்ஸ் குற்றச்சாட்டின் அடிப்படையில் இதை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கருத்து தெரிவிக்கையில், ‘தூதரகம் மூலமான முயற்சிகள் பலன்தராமல் போனால் இந்த பொருளாதார தடை திங்கட்கிழமை (17–ந்தேதி) அமல்படுத்தப்படும்’ என்றார்.

பாதிப்பு ஏற்படுமா?
உக்ரைன் விவகாரத்திற்கு பிறகு ரஷியா பங்குசந்தையில் 2.6 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டது. ரஷியாவிடம் இருந்து தான் ஐரோப்பிய நாடுகள் பெரும் அளவில் பெட்ரோலிய பொருட்களை வாங்குகின்றன. அமெரிக்கா வாங்குவதை விட இது 10 மடங்கு அதிகமாகும்.
இந்த வகையில் கடந்த 2012–ம் ஆண்டில் ரஷியாவுடன் சுமார் ரூ.17¾ லட்சம் கோடிக்கு ஐரோப்பிய நாடுகள் வர்த்தகம் செய்துள்ளன. இந்த பொருளாதார தடையால் ரஷியாவுக்கு பாதிப்பு ஏற்படலாம். ஐரோப்பிய நாடுகளும் ஓரளவு பாதிப்புக்கு உள்ளாகும் என கருதப்படுகிறது.

0 கருத்துக்கள் :