ஐ.நா. தீர்மானத்துக்கு பெரும் வரவேற்பு வடக்கில்; இந்தியாவின் செயல்கண்டு மக்கள் கடுங்கொதிப்பு

29.3.14

இலங்கையின் இறுதிப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுயாதீனமான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபை நிறைவேற்றி உள்ள தீர்மானத்தை இலங்கை ஜனாதிபதியும் அரசும் நிராகரித்துள்ள நிலையில், வடக்கு மக்கள் அதனை பெருமெடுப்பில் வரவேற்றுள்ளனர்.

அதே நேரத்தில் இந்தத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் செம்மையாக நடைமுறைப்படுத்த முடியுமா என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

ஆனால் தீர்மானம் முழுமையாகவும் உறுதியாகவும் நடைமுறைப் படுத்தப்படுவதை அவர்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். இதற்கிடையே இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காமல் விட்டமை குறித்து கடும் கோபமடைந்துள்ள வடக்கு மக்கள். போர்க் காலத்தில் இந்தியா செய்தது போன்ற மற்றொரு துரோகம் இது என்றும் கடுமையாகச் சாடியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்காவினால் நேற்றுமுன் தினம் சமர்பிக்கப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளமை தொடர்பிலும், தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா பங்கெடுக்காமல் ஒதுங்கிக் கொண்டமை தொடர்பிலும் 'உதயன்' பல தரப்பினரிடம் கருத்துக்களைக் கேட்டது.

சி.சிவரூபன் (வைத்தியர்): நிறைவேற்றப்பட்டுள்ள தீர் மானம் வரவேற்கதக்கது. கால இழுத்தடிப்பு இன்றி நடை முறைப்படுத்த வேண்டும்.

இந்தியா தமிழ் மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியுள்ளது என்றார். சுந்தரம் மகேந்திரன் (காணாமற்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர்): இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த போவதில்லை என்று அரசு தெளிவாகச் சொல்லிவிட்டது.

அவர்கள் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் அடிபணியப் போவதில்லை. காரணம் சிங்கள பெளத்த பேரினவாதம் அவர்களுடனேயே உள்ளது. மற்றையது, இந்தததீர்மானத்தைக் கொண்டு வந்த முக்கிய மேற்குலக நாடுகள், இலங்கையில் முதலீடுகளைச் செய்து வருகின்றன.

அவர்கள் இலங்கையில் தமது முதலீடுகள் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்றே எண்ணுவர்கள். மனித உரிமை விடயங்கள் எல்லாம் வெறும் பூச்சாண்டிக்காகவே அவ்கள் கையில் எடுக்கின்றனர்.

இலங்கை இதனை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று பிடிவாதமாக இருக்க மேற்குலகும் காரணம். அவர்கள் தமது வர்த்க நலனுக்காக இலங்கையை உலுப்பப் போவதில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்டபோது, சர்வதேச சமூகம் எவ்வாறு அங்கு திரும்பிப் பார்த்ததோ அதேபோன்று, இங்கும் மக்கள் எழுச்சியினூடாகவே மாற்றங்களைக் கொண்டு வரமுடியும் என்றார்.

திருமதி சரோஜா சிவச்சந்திரன் (மகளிர் அமைப்பு): இலங்கை அரசுக்கு இந்தத் தீர்மானம் அழுத்தத்தை கொடுக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த விசாரணைகளினூடாக தீர்வு கிட்டும் என்ற மகிழ்சி ஏற்பட்டுள்ளது.

மனித உரிமைகள் சபை நடைமுறைப்படுத்துவதைப் பொறுத்தே இது அமையும் என்று குறிப்பிட்டார். அ.குணபாலசிங்கம் (வலி.வடக்கு மீள்குடியேற்றத் தலைவர்): இந்தத் தீர்மானங்களினூடாக உடனடியாக எங்களது மீள்குடியமர்வு நடைபெற்று விடாது.

அதற்கு காலம் எடுக்கும். ஆனால் இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது. நாங்கள் எங்கள் குடியேற்றத்தை நடைமுறைப்படுத்த வேறு வழியையே கையாள வேண்டும்.

இந்தியா தமிழ் மக்களின் கைகளைச் சுட்டுவிட்டது. வயிற்றுக்குத்துக்கும் வடக்கத்தையானை நம்பக் கூடாதென்பார்கள். அதை இந்தியா நிரூபித்து விட்டது. இந்தியா செய்ததை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

க.சுகாஸ் (சட்டத்தரணி):

கடந்த இரண்டு தீர்மானங்களைவிட இந்தத் தீர்மானம் கனதியானது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தற்போதைய நிலையில் வேறு வழியில்லை. இருக்கின்ற வழியைப் பிடித்துத்தான் எங்களுக்கான ஆதரவுத் தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தத் தீர்மானம் தமிழ் மக்களின் அபிலாஷ்­களை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை. இந்தத் தீர்மானத்தில் சொல்லப்பட்டதை விட அதிகமாகவே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். இருப்பினும் இப்போதைய சூழ்நிலையில் இந்தத் தீர்மானத்தை நாம் வரவேற்கின்றோம். தீர்மானம் நடைமுறைப்படுத்துவதைப் பொறுத்தே அதன் வெற்றி தோல்வி தங்கியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களிலும் உப்புச்சப்பற்ற தீர்மானத்துக்கு ஆதரித்த இந்தியா, பொறுத்த தருணத்தில் கைவிட்டு விட்டது. இந்தியாவின் கபட நாடகம் ஜெனீவா தீர்மானத்தின் ஊடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தியா பொறுத்த நேரத்தில் கைவிடும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

அருட்தந்தை செபமாலை (மன்னார் பிரஜைகள்குழு): இந்தத் தீர்மானம் தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி. தமிழ் மக்கள் சார்பில் நீதி நியாயம் இருக்கின்றது என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. உள்நாட்டிலே தீர்வு சாத்தியம் இல்லை.

எமக்கு சர்வதேசம் ஊடகவே தீர்வு கிடைக்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கின்றது. இலங்கை அரசு இனியும் சாக்குப் போக்குச் சொல்லி தப்பிக்க முடியாது.

அரச உயர் அதிகாரி ஒருவர் (பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை): இந்தத் தீர்மானத்தால் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. தமிழ் மக்களுக்கான குரலாக சர்வதேசம் இல்லை.

இந்தியா இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். அவர்களும் குற்றவாளிகளே. குற்றவாளிகள் எப்படியாவது மற்றைய குற்றவாளியை காப்பாற்ற நினைப்பார்களே தவிர, காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :