பாதுகாப்பற்ற நிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது மஹிந்த அரசு

25.3.14

ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டுள்ள சர்வதேச சிறுவர் படை என்ற தொண்டு நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான திட்ட முகாமையாளர் சாரு லற்றா யஹாக்,
 தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உலகெங்கும் படைகளில் இணைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் உரிமைகளுக்காகவும், போர் வலயங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிவரும் பெண்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றார்.
முரண் பாடு நிலவும் பிராந்தியங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது தொடர்பிலான ஐக்கிய இராச்சிய அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் அவர் இலங்கையில் ஆயுதப் படையினரின் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வரும் தமிழ்ப் பெண்கள்  தொடர்பில் விசேட செயற்றிட்டத்தையும் மேற்கொண்டு வருகின்றார்.
அமெரிக்கா மூன்றாவது தட வையாகப் பிரேரணையைச்  சமர்ப்பிக்கின்றது. முன்னைய இரண்டு பிரேரணைகளின் போதும், சர்வதேச சுயாதீன விசாரணை தொடர்பாக எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
உறுப்பு நாடுகள் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை முக்கியமானது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாகப் போதிய வாக்குகளைப் பெற முடியாமற் போனால் மாத்திரமே அங்குள்ள நிலைமையில் மாற்றம் எதுவும் ஏற்படாது.
ஆனால் பிரேரணையை நிறைவேற் றுவதற்குப் போதிய ஆதரவு உள்ளதாகவே நான் கருதுகிறேன்.  பிரேரணையின் வாசகங்கள் மாற்றப்பட்டுள்ளன. பிரேரணை வலுக்குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணை என்ற அம்சத்துக்குப் போதிய ஆதரவு அற்ற நிலை உள்ளது. மனித உரிமைச் சபையினால் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பாகவே கூறப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை அரசைச் சம்மதிக்க வைக்க வேண்டிய தேவை உள்ளது. சாட்சியங்களைத் திரட்டுதல் உட்படப் பல பணிகள் ஆற்றப்பட வேண்டி உள்ளன. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

ஆனால் இது முதலாவது அடியே. தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் நீண்ட காலத்தில் பொறுப்புக் கூறுதலை நோக்கி அது இட்டுச் செல்லும்.

தமிழ் மக்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா?
அதனைக் கூறுவது கடினமானது. ஏனெனில், நிறைவேற்றப்படுகின்ற தீர்மானமானது, பொறுப்புக் கூறலுக்கும், குற்றங்களுக்கான தண்டனை வழங்கலுக்கும் நேரடியாக இட்டுச் செல்லவில்லை.  இறுதியாக, இலங்கை நிலைமைகள் முன்னேற வேண்டுமானால்,  பொறுப்புக் கூறுதல் என்ற விடயம் கவனிக்கப்பட்டாக வேண்டும்.

குற்றங்கள் செய்தவர்கள் -மானுடத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியவர்கள், சர்வதேச மனிதஉரிமைச் சட்டங்களை மீறியவர்கள் - நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இவை நடைபெறாத வரைக்கும் மாற்றங்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது.

எனினும், பொறுப்புக் கூறலுக்கான நிலையை அடைவதற்கான நீண்ட பாதையில் முதற்படியே இது.
பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளைத்  தடுப்பதற்கான சர்வதேச பொறிமுறைகள் ஏதாவது உள்ளனவா?
வடக்கு, கிழக்கில் வாழும் பெண்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான பிரதான காரணம், அவர்கள் துணையின்றி இருப்பதுவே. அவர்களே தங்களுக்கான வாழ்வாதாரங்களைத் தாங்களே தேட வேண்டிய நிலையில் உள்ளனர்.

அந்தப் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்புப் பொறிமுறையும், இராணுவ மயமாக்கலும் தவிர்க்க இயலாத விதத்தில் படையினரோடு அவர்கள் அன்றாடம் பழக வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளன. விடுதலைப் புலிகளோடு தொடர்புகளைப் பேணினார்கள் எனத் தடுத்து வைக்கப்பட்டுப் படையினரின் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதற்கும் அப்பால், அங்கே நிலவும் சூழல் பெண்கள் பாலியல் ரீதியான சுரண்டலுக்கு ஆளாகும் நிலையை உருவாக்கி வைக்கிறது.

இந்த நிலைமையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமானால் முத லாவதாகப்  பொறுப்புக் கூறும் பொறி முறை ஏற்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவதாக, ஐக்கிய இராச்சியம் வன்முறை முரண்பாடு நிலவும் பிராந்தியங்களில் பாலியல் துஷ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பில் ஒரு பெரிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரசின் இந்த வருடத்துக்கும் அடுத்த வருடத்துக்குமான ஒரு பிரதானமான திட்டமாக அது உள்ளது.

ஐக்கிய இராச்சியம் இது தொடர்பில் பெண்களுக்கு ஆதரவு வழங்கக் கூடிய, பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கக் கூடிய தொண்டு நிறுவனங்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றது. முரண்பாடு நிலவும் பிராந்தியங்களில் வசிக்கும் பெண்கள் தமது தேவைகளுக்காக பாதுகாப்புப் பிரிவினரை நாடுவதைத் தடுப்பதே இதன் நோக்கம்.

விடுதலைப் புலிகளின் அபாயம்
மஹிந்த ராஜபக்­ அரசு தொடர்ச்சியாக ஒரு பாதுகாப்பற்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. தங்களு டைய சொந்த ஊழல் செயற்பாடுகள், தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாகத் தெற்கில் அரச அதிகாரத் துக்கு ஏற்பட்டுள்ள சவால்கள், இராணுவ அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை போன்ற காரணங்க ளுக்காக  விடுதலைப் புலிகள் தொடர்பான அச்சம் என்ற விடயத்தை வைத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது.

இத்துணை பெரிய இராணுவத்தைத் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டுமானால், அதற்கொரு எதிரியை உருவாக்கி வைத்திருக்க வேண்டும். அதனையே நாங்கள் தற்போது இலங்கையில் கண்டு கொண்டிருக்கிறோம். http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5056757526624912

0 கருத்துக்கள் :