சிறிலங்கா மற்றும் மியான்மாரில் வாழும் முஸ்லீம்களுக்கு எதிரான பௌத்தர்களின் வன்முறைகள்

11.3.14

சிறிலங்காவில் இடம்பெறும் முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகள் மியான்மாரில் வாழும் முஸ்லீம்கள் சந்திக்கும் பிரச்சினைகளை ஒத்ததாகக் காணப்படுவதாக இவ்வாரம் இடம்பெற்ற ஆய்வரங்கு ஒன்றில் அனைத்துலக வல்லுனர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்காவில் இடம்பெறும் முஸ்லீம் எதிர்ப்பு வன்முறைச் சம்பவங்களில் எவரும் இறக்கவில்லை எனினும், மியான்மாரில் வாழும் நூற்றுக்கணக்கான றோகின்ஜ முஸ்லீம்களைப் போன்று சிறிலங்கா முஸ்லீம்களும் பல்வேறு துன்பங்களைச் சந்திப்பதாக மார்ச் 06 அன்று இடம்பெற்ற ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லீம் எதிர்ப்புக்களால் பாதிக்கப்படும் முஸ்லீம்களைப் பாதுகாப்பதற்கு உதவுவதை நோக்காகக் கொண்டு 'சிறிலங்காவிலும் மியான்மாரிலும் வாழ்கின்ற முஸ்லீம்களுக்கு எதிரான பௌத்தர்களின் வன்முறைகள்' என்ற தலைப்பின் கீழ், புடாபெஸ்ற் மத்திய ஐரோப்பியப் பல்கலைக்கழகத்தில் [Central European University's School of Public policy in Budapest] இடம்பெற்ற ஆய்வரங்கில் வல்லுனர் குழுவால் ஆராயப்பட்டது. சிறிலங்காவில் முஸ்லீம்கள் ஒன்பது சதவீதமாகவும் பௌத்தர்கள் 70 சதவீதமாகவும் காணப்படுவதாகவும் ஆனால் முஸ்லீம்களால் தமக்கு ஆபத்து நிலவுவதாக பௌத்தர்கள் கூறுவதற்கான காரணம் என்ன எனவும் இவ்வாய்வரங்கில் கலந்து கொண்டவர்கள் வினவினர்.

மியான்மாரில் வாழும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். ஆனால் சிறிலங்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லீம் பெண்கள் முக்காடுகளைக் கழற்றவேண்டும் எனவும் வரையறுக்கப்பட்ட வன்முறைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் சிறிலங்காவில் சில முஸ்லீம்கள் மட்டும் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்காவின் தீவிர பௌத்த அமைப்பான பொது பல சேனவின் தலைவர்கள் மியான்மாருக்குச் சென்றதுடன் தீவிர பௌத்த பிக்குவான அசின் விறத்து உட்பட 969 தீவிரவாதத் தலைவர்களைச் 969 Movement leaders, extremist monk Ashin Wirathu சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை முஸ்லீம்கள் கவலை தெரிவித்துள்ளனர். மியான்மாரில் வாழும் பௌத்த காடையர்கள் 200 இற்கும் மேற்பட்ட முஸ்லீம்களைப் படுகொலை செய்துள்ளதுடன் 150,000 வரையான மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர வைத்துள்ளனர். இந்த மக்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் ஆவர். மேற்கு மியான்மாரின் றக்கினே மாநிலத்தின் தலைநகரான சிற்வேயில் உள்ள மிகப் பெரிய முகாங்களில் இடம்பெயர்ந்த றோகின்ஜ முஸ்லீம்கள் Rohingya Muslims வாழ்கின்றனர். இவ்வாறான வன்முறைகளில் தாம் ஈடுபடவில்லை என விறத்து கூறுகிறார்.

 ஆனால் தீவிர பௌத்த பிக்குவான விறத்துவின் முஸ்லீம் எதிர்ப்புப் பரப்புரைகள் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதைத் தூண்டுவதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவில் பொதுபல சேன அமைப்புச் செயற்படுவது போன்று மியான்மாரில் விறத்துவின் அமைப்பு தீவிர முஸ்லீம் எதிர்ப்புப் பரப்புரைகளில் ஈடுபடுகின்றது. எடுத்துக்காட்டாக சிறிலங்காவில் முஸ்லீம்களுக்கென 'கலால்' உணவுகள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் எனவும் பௌத்தர்கள் முஸ்லீம்களுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது எனவும் பொது பலசேன அமைப்பு பரப்புரைகளை மேற்கொள்கிறது.

அத்துடன் சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்களின் வாழ்விடங்களை அபகரிப்பதற்கும் இது துணைபோகிறது. றோகின்ஜ முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படவில்லை என மியான்மார் அரசாங்கம் கூறுகிறது. றோகின்ஜ முஸ்லீம்கள்; சித்திரவதைப்படுத்தப்படுகின்றனர் என்கின்ற குற்றச்சாட்டு நியாயமற்றது என அண்மையில் மியான்மார் அதிபர் பேச்சாளர் ஜிகுற்றுற் சுட்டிக்காட்டியிருந்தார். 1991ல் சமாதாப் பரிசை வென்றெடுத்த முன்னால் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகிக்கு எதிரான வன்முறைகள் உட்பட பல்வேறு முஸ்லீம் எதிர்ப்பு வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆய்வுகளும் தீர்வுகளும் மத்திய ஐரோப்பாவில் இடம்பெற்ற ஆய்வரங்கில் முன்வைக்கப்பட்டன.

  "சூகி தனது அரசியற் தலைநகரில் முக்கியமில்லாத பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார். இவர் றோகின்ஜ முஸ்லீம்களுக்காகக் கதைக்க முடியாதுள்ளார் என்பதற்கான எவ்வித காரணங்களும் இல்லை" என மியான்மாருக்கான அனைத்துலக நெருக்கடிகள் குழு மற்றும் சமாதான மையத்தின் ஆலோசகரான கலாநிதி றிச்சார்ட் கோர்சி சுட்டிக்காட்டியுள்ளார். றோகின்ஜ முஸ்லீம்களின் பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்துவதில் ஆங் சான் சூகி ஈடுபடவில்லை என மனித உரிமை அமைப்புக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

  தீவிர பௌத்த குழுக்களால் பயன்படுத்தப்பட்ட மூலோபாயங்கள் குறித்தும் முஸ்லீம் எதிர்ப்பு வன்முறைகள் குறித்தும் கருத்தரங்கில் ஆராயப்பட்டது. லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் 'சம்பாலா' என்கின்ற பௌத்த அமைப்பின் தலைவரான றிச்சார்ட் றியோக்கிடம், "ஏன் பௌத்தர்கள் கொலை செய்கின்றார்கள்?" என மோதல் சமரசம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான மையத்தின் இயக்குனர் பேராசிரியர் றொபேற் ரெம்ப்ளர் வினவினார். "இது உணர்ச்சி வசப்படுதல், கலாசாரம் மற்றும் அடையாளம் ஆகிய மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறுகிறது" என றியோக் தெரிவித்தார். இந்த மூன்று காரணிகளும் மக்கள் தமது மத நம்பிக்கைகளை மறந்து வன்முறைகளில் ஈடுபடத் தூண்டுகிறது என றியோக் பதிலளித்தார். செய்தி வழிமூலம் : Anadolu Agency - AA மொழியாக்கம் : நித்தியபாரதி

0 கருத்துக்கள் :