சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு அனுசரணை வழங்குவது ஏன்? – மொறிசியஸ் விளக்கம்.

10.3.14

மனிதஉரிமை விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினாலேயே, சிறிலங்கா மீதான தீர்மானத்தை தமது நாடு முன்னின்று கொண்டு வருவதாக , மொறிசியஸ் வெளிவிவகார அமைச்சர் அர்வின் பூலெல் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரனிக்ரோ ஆகிய நாடுகளுடன் இணைந்து சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதில், மொறிசியஸ் ஈடுபட்டுள்ளது குறித்து சிறிலங்கா கவலை வெளியிட்டிருந்தது. இந்தநிலையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்து மொறிசியஸ் வெளிவிவகார அமைச்சர் அர்வின் பூலெல் பிபிசியிடம் கருத்து வெளியிட்டுள்ளார். “மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல் கொடுக்கும் எமது அரசின் நிலைப்பாடு காரணமாகவே, சிறிலங்கா மீதான தீர்மானத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து கொண்டு வருகிறோம். ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் படியும், கொமன்வெல்த் மாநாட்டின் இறுதி முடிவுகளின் அடிப்படையிலுமே, நாங்கள் இந்த தீர்மானத்துக்கு அனுசரணை வழங்குகிறோம். கொமன்வெல்த் சாசனம் மற்றும் ஐநா மனிதஉரிமைகள் சாசனம் ஆகிய ஏற்பாடுகளுடன் முற்று முழுதாக இசைந்து நடக்க வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. தற்போது விவாத மட்டத்தில் இருக்கும் சிறிலங்கா மீதான தீர்மானத்தின் முன்வரைவில் மாற்றங்கள் ஏற்படக்கூடும், என்றாலும், மனிதஉரிமை விழுமியங்களைப் பாதுகாத்தல் என்ற முக்கிய கடப்பாட்டில் கருத்தொற்றுமை ஏற்படும். சிறிலங்காவில் சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும், முக்கிய மனிதஉரிமை விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினாலேயே சிறிலங்கா மீதான தீர்மானத்தை முன்னின்று கொண்டு வருகிறோம். மொறிசியஸ் எந்தவொரு நாட்டின் அழுத்தத்திற்கும் உள்ளாகி செயற்படவில்லை. மனிதஉரிமைகளுக்காக முன்னிற்பதே எமது நாட்டின் தலையாய கடமை. சிறிலங்கா மீதான தீர்மானம் ஒட்டுமொத்த இலங்கைக் குடிமக்களுக்கும் பொதுவான- உலக மக்களுக்கே பொதுவான மனிதஉரிமை விழுமியங்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளதால் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்காது” என்றும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :