சிறிலங்காவுக்கு எதிராக நவிபிள்ளையுடன் இணைந்தனர் சமந்தா பவர், நிஷா பிஸ்வால்

1.3.14

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளான சமந்தா பவர், நிஷா தேசாய் பிஸ்வால் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நவநீதம்பிள்ளையின் அறிக்கை தொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில், கருத்து வெளியிட்டுள்ள, ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரத் தூதுவர் சமந்தா பவர், சிறிலங்கா ஜனநாயக ஆட்சிமுறைக்கும், மனிதஉரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும், மத வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விடுத்துள்ள அழைப்புக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
சிறிலங்கா நல்லிணக்கம் அல்லது போர்க்குற்றங்கள், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறுவது அல்லது நீதி வழங்குவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :