வட்டுக்கோட்டையில் பெரும் தேடுதல் ; 300 க்கும் மேற்பட்டோர் விசாரணை

22.3.14

வட்டுக்கோட்டை பகுதி நேற்றிரவு முதல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று காலை முதல்  வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

தருமபுரத்தில் ஜெயக்குமாரியின் வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்ட போது  பொலிசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய நபர் வட்டுக்கோட்டையில் மறைந்திருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து   நேற்றிரவு தொடக்கம் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து அப்பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

  இரவிரவாக நடைபெற்ற தேடுதலில் இராணுவத்தினர் மதில் பாய்ந்தும் , வேலிகளை வெட்டியும் வீடுகளுக்குள் உள்நுழைந்து உரிமையாளர்கள்  இல்லாத வீடுகளின் கதவுகளை உடைத்தும் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

600 க்கும் அதிகமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அழைக்கப்பட்டு இன்று காலை 6 மணி முதல் விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்  வெளியிடங்களுக்கு செல்ல இராணுவத்தினர் தடை  விதித்துள்ளதாகவும் வெளியிடங்களிலிருந்து செல்லும் வாகனங்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்குள் இராணுவத்தினர் திடீரென நுழைந்து சோதனை மேற்கொள்வதால் அப் பகுதி மக்கள் பெரும் பீதியுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை கேள்வியுற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வட்டுக்கோட்டைப் பகுதிக்கு சென்று நிலைமையை அவதானித்ததுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுக்குமாறு தெரிவித்தார்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :