23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்

27.3.14

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானம், 23 நாடுகளின் ஆதரவுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்திருந்தன. தீர்மானத்தை எதிர்த்து 12 நாடுகள் வாக்களித்தன. அதேவேளை, 12 நாடுகள், வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தன.

ஜெனிவா நேரப்படி இன்று பிற்பகல் 12.25 மணியளவில் (இலங்கை நேரம் 4.55 மணி) தீர்மானத்தை முன்வைத்து அமெரிக்கப் பிரதிநிதி உரையாற்றினார்.
தீர்மானத்துக்கு 41 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்காவின் மோசமான மனிதஉரிமைகள் நிலையை சுட்டிக்காட்டிய அமெரிக்கப் பிரதிநிதி, தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு உறுப்பு நாடுகளிடம் கேட்டுக் கொண்டார்.
அடுத்து, இணை அனுசரணை வழங்கும் நாடுகள்ன சார்பில் மசி டோனியா, மொறிசியஸ், ஐரோப்பிய ஒன்றியம்,மொன்ரனிக்ரோ, நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினார்.
தொடர்ந்து, சிறிலங்காவின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவுக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
அவர், இந்த தீர்மானம் ஐ.நா பிரகடனத்துக்கு எதிரானது என்றும், உறுப்பு நாடு ஒன்றின் இறைமைக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றும் சுட்டிக்காட்டினார்.
தீர்மானத்தை சிறிலங்கா நிராகரிப்பதாகவும் உறுப்பு நாடுகள் இதனை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அடுத்து, பாகிஸ்தான், கியூபா, இந்தியா, வெனிசுவேலா, சீனா, ரஷ்யா,கியூபா, மாலைதீவு , இந்தோனேசியா ஆகிய நாடுகள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
தீர்மான வரைவின் 10வது பந்தியில் திருத்தம் செய்யும் யோசனை ஒன்றை பாகிஸ்தான் முன்வைத்தது, அதற்கு சீனா, ரஷ்யா  ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
அடுத்து, பாகிஸ்தான், விசாரணைக்கான  நிதி ஒதுக்கீடு குறித்த பிரச்சினையை எழுப்பி, வாக்கெடுப்பை ஒத்திவைக்க கோரியது,
இந்தக் கோரிக்கை  வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, ஒத்திவைக்க வேண்டும் என்று 16 நாடுகளும், அதற்கு எதிராக 25 நாடுகளும் வாக்களித்தன.
இதனால், பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அதையடுத்து, தீர்மானத்தின்  10வது பந்தியை திருத்தம் செய்ய வேண்டும் என்ற பாகிஸ்தானின்  கோரிக்கை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
அதற்கு, ஆதரவாக 23 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்ததால், 10வது பந்தி திருத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீர்மானம்  ஜெனிவா நேரப்படி பிற்பகல் 1.51 மணிக்குற்கு ( இலங்கை நேரம் 6.21)வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது தீர்மானத்துக்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்திருந்தன. தீர்மானத்தை எதிர்த்து 12 நாடுகள் வாக்களித்தன.
அதேவேளை, 12 நாடுகள், வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தன.

0 கருத்துக்கள் :