மூன்று பேர் தூக்கு ரத்து! சீமான் அறிக்கை..

18.2.14

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி தூக்கு தண்டனைக்கு ஆளாகி இருந்த முருகன், சாந்தன்,பேரறிவாளன் மூவரையும் தூக்கிலிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது;


தம்பிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருடைய மரண தண்டனையையும் ரத்து செய்திருக்கும் தீர்ப்பு மனிதநேயத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி. 'மரண தண்டனையை ஒழிப்போம்; மனிதநேயம் காப்போம்' எனப் பன்னெடுங்காலமாக முழக்கமிட்டு  போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. வழக்கறிஞர்கள் அங்கயற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா ஆகியோர் முன்னெடுத்து தொடங்கி வைத்த பட்டினிப்  போராட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உணர்வு மேலிட வைத்து, வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், மனித நேய காப்பாளர்கள், மாணவர்கள், தமிழின உணர்வாளர்கள்,கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரையும் தூக்கு தண்டனைக்கு எதிரான ஒருமித்த குரலாக முழங்க வைத்தது. 23 வருடங்களாக சிறைக் கொட்டடியில் தூக்கின் துரத்தலுக்கு ஆளாகிக் கிடந்த முருகன்,சாந்தன்,பேரறிவாளன் மூவரையும் காப்பாற்றக் கோரி தங்கை செங்கொடி தன்  உயிரையும் உடலையும் தீப்பந்தமாக்கிப் போராட தமிழ்நாட்டின் பேரெழுச்சி பெரு மடங்கானது.


ஆரம்பம் தொட்டே மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டி ஒற்றை மனுசியாக தாய் அற்புதத்தம்மாள் நடத்திய பெரும் பயண போராட்டத்தால் அகில இந்திய அளவில் மூவர் தூக்கு விவகாரம் கவனிக்கப்பட்டது. இத்தகைய ஒட்டு மொத்த தமிழகத்தின் பன்முகப் போராட்டங்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியே மூவருக்குமான தூக்கு ரத்தாகி இருக்கும் உத்தரவு. விடாப்பிடியும் வைராக்கியமும் கொண்ட போராட்டங்களால் எத்தகைய இரும்பு கதவுகளையும் உடைத்தெறிய முடியும் என்பதற்கு இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பே உதாரணம்.


ஒட்டுமொத்தத் தமிழர்களும் தங்களுக்கான விடிவெள்ளி நிகழ்வாக உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கொண்டாடி வரும் நிலையில், இந்த சட்டப் போராட்டத்துக்கு இரவு பகல் பாராமல் அரும்பாடுபட்ட மூத்த வழக்கறிஞர் சட்டத்தரணி தடா சந்திரசேகர், வழக்கறிஞர்கள் பிரபு, பாரி, ரூபேஷ், ஆகியோருக்கும், மிகுந்த பணிகளுக்கு மத்தியில் தமிழர் உயிர்காக்க வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தமிழ் சமூகம் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது. மறத் தமிழராக மனிதநேய மாண்பாளராக நீதி வழங்கிய நீதியரசர் சதாசிவம் ஐயா அவர்களை உலகத் தமிழினமே நன்றியோடு நினைத்துப் பார்க்கிறது. தமிழக அரசு விருப்பத்தின் பேரில் மூவருக்குமான சிறை விடுதலையை வழங்கலாம் என்கிற உத்தரவையும் நீதியரசர் சதாசிவம் அவர்கள் கூறி இருக்கிறார். இதனை தமிழக அரசு உடனடியாகக் கவனம் கொண்டு மூன்று தம்பிகளையும் உடனே விடுவிக்க வேண்டும்.


23 வருடங்களாக தங்களின் நல் வாழ்வை தொலைத்தும் சிறையில் நன்னெறியோடு வாழும் தம்பிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரோடு தம்பிகள் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், அக்கா நளினி ஆகியோரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கருணையோடு நினைத்துப் பார்க்க வேண்டும். தனி ஈழத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியும், மூவர் தூக்கு தண்டனைக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்றியும், மூவர் உயிர்காக்க நீதிமன்றத்தில் வாதாடியும் பெரும் பங்காற்றிய தமிழக அரசு ஏழு பேர்களின்  சிறைக் கதவுகளை திறந்து விட்டு, தமிழர் நெஞ்சங்களில் நீங்க இடம் பிடிக்கும் நடவடிக்கைகளை  உடனே முடுக்கி விட வேண்டும். ஏழு பேர்களின் விடுதலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வழி செய்தால், அது உலகத் தமிழர்களால் எந்நாளும் எண்ணிப் பார்க்கும் பெருநன்றி நிகழ்வாக இருக்கும்.


மூவர் தூக்குக்கு விடிவு கிடைத்திருக்கும் நிலையில் இந்த மகிழ்ச்சித் தருணத்தில் இதற்குக் காரணமான அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.


இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்து இருக்கிறார்.

0 கருத்துக்கள் :