கூட்டணி கிடையாது - தனித்துதான் போட்டி : தொண்டர்கள் கருத்து - விஜயகாந்த் ஏற்பு

2.2.14

தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு இன்று மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை எறஞ்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசுவார் விஜயகாந்த் என்று அனைத்து தரப்பினராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த மாநாட்டில் பேசிய கழக நிர்வாகிகளூம், சட்டமன்ற உறுப்பினர்களும் கூட, கேப்டன் என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிவதற்குத்தான் இந்திய நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

   பிரதமரை முடிவெடுக்கப்போவது கேப்டன் தான் என்று பில்டப் கொடுத்து வந்தனர். சமீபத்திய பேட்டிகளில் கூட, உளுந்தூர்பேட்டை மாநாட்டில் கூட்டணி குறித்து பேசுவேன். என்று விஜய காந்த் பில்டப் கொடுத்தார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற மாநாட்டில், தொண்டர்களைப்பார்த்து கூட்டணி தேவையா? தனித்து போட்டியிடவேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார் விஜயகாந்த்.

    தொண்டர்கள் அனைவரும் கூட்டணி வேண்டாம் என்று சத்தம் எழுப்பினர். ‘’பார்த்தீங்களா? பத்திரிகையாளர்களே பார்த்தீர்களா? கூட்டணி வேண்டாம் என்று என் தொண்டர்களே சொல்லிவிட்டார்கள். சட்டமன்ற தேர்தலில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தொண்டர்களை கேட்டுத்தான் கூட்டணி வைக்க முடிவெடுத்தேன். அப்போது கூட்டணி வேண்டும் என்று சொன்னார்கள்.

  இப்போது வேண்டாம் என்று சொல்கிறார்கள். காரணம், கூட்டணிக்கு சென்று எப்படியெல்லாம் அடிபட்டோம்; அசிங்கப்பட்டோம் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தான் வேண்டாம் என்கிறார்கள்’’ என்று முடித்தவர், ‘’ஆனால், இதையும் தாண்டி முடிவெடுக்கும் உரிமை தலைவருக்கு இருக்கிறது’’ என்று மறுபடியும் பில்டப்பை தொடங்கினார் விஜயகாந்த்.

0 கருத்துக்கள் :