இலங்கையை வழிக்குக் கொண்டு வருவதற்குத் தடுமாறும் சர்வதேச சமூகம் :செல்வரட்னம் சிறிதரன்

12.2.14

இலங்கை ஒரு பாரம்பரிய ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகின்றது. ஆனால் யுத்த வெற்றிவாத அரசியலின் அடிப்படையில் ஜனநாயக சர்வாதிகாரமே இங்கு கோலோச்சுகின்றது.

எனவே, ஜனநாயகம் பெயரளவிலேயே நிலவுகின்றது என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. வெல்ல முடியாத யுத்தம் என்று நம்பப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அடைந்த இணையற்ற வெற்றியே கடந்த ஐந்து வருடங்களாக அரசியலில் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றது.
யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் உள்ளிட்ட முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. இந்த அபிவிருத்தி என்ற மாயைக்குள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் குடும்ப அரசியல் ஆழமாக வேரூன்றி நிலைபெற்றிருக்கின்றது.

தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி ஆகிய இரண்டையும் மையப்படுத்தியுள்ள இந்த குடும்ப அரசியலானது. நாட்டின் ஆட்சி முறையில் அனைத்து முக்கிய அம்சங்களையும் கபளீகரம் செய்திருக்கின்றது. தேசிய பாதுகாப்பு என்பது நாட்டின் எல்லைகளில் இருந்து விரிந்து வெளிநோக்கிச் செல்வதற்குப் பதிலாக நாட்டிற்குள்ளேயே நகர அபிவிருத்திச் செயற்பாடுகள் வரையில் மிகவும் ஆழமாகப் பரந்து கிடக்கின்றது.

இதன் செயல் வீரர்களாக யுத்தத்தில் வெற்றிகளைக் குவித்த இராணுவத்தினர் திகழ்கின்றனர். தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் எங்கும் எதிலும் முதன்மை பெறுபவர்கள் இராணுவத்தினராகவே இருக்கின்றார்கள்.

நகரத்தைச் சுத்தப்படுத்துவது, அழகுபடுத்துவதில் இருந்து, சிறு வியாபார முயற்சி, உல்லாசப் பயணிகளுக்கான ஆடம்பர விடுதிகளை நடத்துவது, விவசாயம் உள்ளிட்ட உற்பத்தித்துறை என பலதுறைகளிலும் இன்று இராணுவத்தின் கை ஓங்கியிருக்கின்றது. இதனால், அந்தந்த துறைசார்ந்தவர்கள் இப்போது பின்தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

வாழ்வாதாரத்திற்காகப் பலதுறைகளிலும் பாரம்பரியமாக ஈடுபட்டிருந்தவர்களுக்கு தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் உள்நுழைந்துள்ள இராணுவத்தினருடன் தொழிலில் போட்டியிட முடியாத மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. நாட்டில் எந்தத்துறையை எடுத்தாலும், அங்கு தேசிய பாதுகாப்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பின்னிப்பிணைந்திருக்கின்றது.

தேசிய பாதுகாப்பு என்று பாதுகாப்புக்கு அதீதமாக முதலிடம் கொடுக்கப்பட்டுள்ள நாட்டில் சட்டமும் ஒழுங்கும் யுத்த காலத்திலும்பார்க்க மோசமாக சீர்குலைந்து கிடக்கின்றது. ஒரு ஜனநாயக நாட்டில் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகச் செயற்பட்டு வருகின்ற பொலிசாரை உள்ளடக்கிய காவல்துறையே சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற அதிகாரமிக்க ஓர் அமைப்பாக இருப்பது வழக்கம்.

சட்டமும் ஒழுங்கும் எப்போதாவது, காவல் துறையின் சக்தியை மீறி, சீர்குலைகின்றபோதுதான் உதவிக்காக இராணுவத்தினரை அழைப்பார்கள். இது ஒரு ஜனநாயக நாட்டின் நடைமுறையாகும். ஆனால் வெல்லமுடியாத ஒரு யுத்தத்தில் வெற்றியடைந்து, பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாமல் ஒழித்துள்ள இலங்கையில் காவல் துறையானது, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு, அதன் தனித்தன்மை மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றது.

அரசியல் தலையீடும், ஊழலும் மலிந்த துறையாக மாற்றப்பட்டிருக்கின்றது. சட்டமும், ஒழுங்கும் அரசியல் செல்வாக்கின் பிடியில் சிக்கி படாத பாடு படுகின்றன. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் இராணுவத்தினரும், அவர்களுடன் இணைந்து புலனாய்வு துறையினருமே ஈடுபடுத்தப்படுகின்றார்கள். காவல்துறையினர் பெயரளவிலேயே பயன்படுத்தப்படுகின்றனர்.
பொறுப்பாக ஒரு விடயத்தில் முழுமையாக ஈடுபட்டாலும்கூட, அவர்கள் தமது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாத அளவில் அரசியல் தலையீடுகள் குறுக்கிடுகின்றன. நாட்டின் தென்பகுதியில் வெலிவேரியா தொடக்கம், பல சம்பவங்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாக அமைந்திருக்கின்றன. வடக்கிலும் கிழக்கிலும் இது நாளாந்தச் செய்பாடாக அனைத்து நடவடிக்கைகளிலும் இடம்பெற்று வருகின்றது.

காவல்துறை மட்டுமல்ல, நீதித்துறையும் அரசியல் ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி, தனக்கேயுரிய தனித்துவத்தையும், சுதந்திரத்தையும், சோபையையும் இழந்து தவிக்கின்றது. பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கா அரசியல் பழிவாங்கலின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டது இதற்கு சிறந்த சாட்சியமாகத் திகழ்கின்றது.

மக்களுக்குப் பயன்படாத அபிவிருத்தி
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டின் அபிவிருத்திக்கென கோடிக்கணக்கில் பணம் கொட்டப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகி;ன்றது. மாடமாளிகைகள், கூடங்கள், கோபுரங்கள், உல்லாசப் பயணிகளுக்கான சொகுசு நிறைந்த விடுதிகள், விற்பனை நிலையங்கள், பளபளக்கின்ற துறைமுகங்கள், பெரிதும் சிறிதுமாக விமானத்தளங்கள், கறுத்த நிறத்தில் மின்னி மயக்கி வழுக்கியோடும் விரைவு சாலைகள், விரிந்து அகன்ற வீதிகள் என இந்த அபிவிருத்தி நாடெங்கிலும் கொட்டிக்கிடக்கின்றது, மேலோட்டப் பார்வையில் எல்லாமே கண்களைப் பறித்து பளபளக்கின்றன. அரசாங்கத்தின் இந்த அபிவிருத்திச் செயற்பாடானது, பழக்கப்பட்ட இடங்களையெல்லாம் புதிய இடங்களாக உருமாற்றம் செய்து, மக்களைத் தடுமாறச் செய்திருக்கின்றது. பிரமிக்க வைத்திருக்கின்றது.
சொந்தத் துயரங்களை மறக்கச் செய்து, எதிர்காலம் பற்றிய தொலைநோக்கிலான சிந்தனையை மழுங்கடித்து, மகிழ்ச்சியில் திளைக்கச் செய்திருக்கின்றது. இந்த நிலைமை, குறிப்பாக நாட்டின் தென்பகுதியில் பெருமளவிலும் ஒப்பீட்டறவில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் குறைந்த அளவிலும் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

நாட்டில் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. திரவப்பால் உற்பத்தி தன்னிறைவு பெறாததால், பால் பக்கற்றுகளையே நம்பியிருக்கின்ற பெரும்பாலான மக்கள், இன்று பால்மா வாங்குவதெற்கென்றே தனியாக உழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
பால்மா என்பது, ஓர் ஆடம்பரப் பொருளாக மாறியிருக்கின்றது. இதனால், சர்வதேச மட்டத்தில் தேயிலை உற்பத்திக்குப் பெயர் பெற்றுள்ள இலங்கை மக்கள் பால் தேநீர் குடிப்பதைப் படிப்படியாக மறக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகி வருகின்றார்கள்.

நாளாந்தம் வேலை செய்து வாழ்க்கை நடத்துகின்ற வறிய மக்களின் நாட்கூலி மூன்று இலக்கத்தில் இருந்து நான்கு இலக்கமாக – ஆயிரம் ரூபாவை எட்டிப் பிடித்திருக்கின்றது. பாராட்ட வேண்டிய அபிவிருத்தி. ஆனால், இரண்டு இலக்கம் கொண்ட பத்து ரூபாவுக்கு இன்று எதையுமே வாங்க முடியாத நிலை.

பத்து ரூபாவின் இடத்தை ஐம்பது ரூபா வேகமாக எட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு கிலோ அரிசியின் விலை நூறு ரூபா எல்லையை இதோ எட்டப் போகிறேன், அதோ எடடப் போகிறேன் என்று ஓட்டப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பது சதக் கணக்கில் இருந்து விடுபட்டு, குறைந்தது பதினைந்து ரூபாயிலிருந்து, நூறு இருநூறு ரூபாய் என எகிறிக்கொண்டிருக்கின்றது. இதனால் நாட்டில் சாதாரண மக்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு கூன் விழுந்தவர்களாக மாறி வருகின்றார்கள்.

பலவீனத்திற்குள்ளேயும் பலமுள்ள நிலைமை
ஆனாலும் யுத்தத்தின் வெற்றிவாத அரசியல் நாட்டின் தென்பகுதி மக்களுடைய கண்களை மறைத்து அறிவையும் மழுங்கடித்து, இந்த அரசாங்கத்தின் பின்னால் அணிவகுத்து நிற்கச் செய்திருக்கின்றது.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூற வேண்டும், நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள நிலையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும், இனப்பிர்சசினைக்குத் தீரவு காணும் வகையில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றெல்லாம் சர்வதேசம் இலங்கை அரசுக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றது. இந்த அழுத்தமானது, ஐநா மனித உரிமைப் பேரவையில் மூன்றாவது முறையாக இப்போது பெரும் நெருக்கடியாக உருவெடுத்திருக்கின்றது. இதனால் நாட்டின் அரசியல் நிலையானது சர்வதேச மட்டத்தில் ஆட்டம் காணும் அளவுக்கு நெருக்கடி மிகுந்ததாக மாறியிருக்கின்றது.

எனினும் நாட்டின் பேரினத்தவராகிய சிங்கள மக்களின் ஆதரவு என்ற தூணில் சார்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றது. சிறுபான்மை இன மக்களின் அரசியல் ஆதரவைப் படிப்படியாக அரசாங்கம் இழுந்து வருகின்றபோதிலும், சர்வதேச அரசியல் அழுத்தத்தை அரசாங்கம் இந்தப் பெரும்பான்மை பலத்தின் மீது தொங்கிக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆதிக்கமும், அரசியல் சாணக்கியமும் பெரும்பான்மை மக்களைப் பலமான ஒரு கட்டுக்குள் வைத்து, அரசியல் ஸ்திரத்தன்மையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. நாடாளவிய ரீpதியில் பொதுமக்களின் ஒருங்கிணைந்த அரசியல் ஆதரவு சரிந்து செல்கின்ற போதிலும், பெரும்பான்மைப் பலம் என்ற நூலில் இந்த ஸ்திரத்தன்மை தள்ளாடிக் கொண்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிகின்றது.

இருப்பினும், இந்தத் தள்ளாட்டததைப் பயன்படுத்தி நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், குடும்ப அரசியலை முடிவுக்குக் கொண்டு வரத்தக்க வகையில் எதிர்க்கட்சிகள் அரசியல் பலமிழந்திருக்கின்றன. நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற முடியாதவைகளாக நலிந்து கிடக்கின்ற எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாகக் கையாலாகாத நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தின் கட்டுக்காவலாகத் திகழ வேண்டிய எதிர்க்கட்சிகள் இவ்வாறு பலமிழந்திருப்பதுவும் இந்த அரசாங்கத்தைப் பலவீனமான ஒரு நிலையிலும் பலமுள்ள ஒரு சக்தியாக நிமிர்ந்து நிற்பதற்குப் பேருதவி புரிந்து வருகின்றது.

இதன் காரணமாக சர்வதேச அழுத்தங்கள், மற்றும் உள்நாட்டில் பொதுமக்களின் எதிர்கால நலன்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இலங்கையில் குடும்ப அரசியல் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்றது.

வெல்ல முடியாத வெளிநாட்டுக் கொள்கைகள் பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டும் என்ற சர்வதேச அரசியல் நிலைப்பாட்டை, உள்நாட்டு அரசியலில் ஆதாரமாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்துவதற்கு இந்தியா உள்ளிட்ட பலமுள்ள நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம், எதிர் சக்திகளுக்கிடையிலும் மாறிமாறி ஆதரவைப் பெறுகின்ற அரசியல் சாணக்கியத்தையும், ராஜதந்திரத்தையும் பயன்படுத்தி சர்வதேச எதிர்ப்புக்களை முறியடித்து முன்னேறுகின்ற ஒரு போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.

யுத்தத்தை நடத்துவதற்காக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதரவைப் பெற்றருந்த இந்த அரசு, அதேநேரத்தில் இந்த நாடுகளின் பிராந்திய எதிர் சக்தியாகிய சீனாவின் ஆதரவையும் தக்கவைத்துக் கொண்டு, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து வருகின்ற அழுத்தங்களுக்கு சாதுரியமாக முகம் கொடுத்து வருகின்றது.

இரண்டு தோனிகளில் கால் வைக்கின்ற ஆபத்தான நடவடிக்கையாக இந்தச் செயற்பாடு கருதப்பட்டபோதிலும், இலங்கை அரசு ஒரு வகையில் அதனைத் தனது அரசியல் நலன்களுக்காக சாதுரியமாகப் பயன்படுத்தி வருகின்ற ஒரு போக்கைக் காணமுடிகின்றது.
இரண்டு தோனிகளில் கால்கள் இருந்த போதிலும், இலங்கையின் இந்த வெளிநாட்டு அரசியல் போக்கை இந்தியாவும்சரி, அமெரிக்காவும்சரி முறியடிக்க முடியாத நிலையில் இருப்பது ஓர் அரசியல் விநோதமாகவே தென்படுகின்றது.

மோசமான ஒரு யுத்தத்திற்கு முகம் கொடுத்து, அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ள இலங்கையைத் தங்களுடைய போக்கிற்கு வளைக்கவும் முடியாமல் முறிக்கவும் முடியாத நிலையிலேயே இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட்ட சரவதேச நாடுகள் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் மனித உரிமைகளைப் பேணுவது, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பது போன்ற பல விடயங்களில் சர்வதேசத்திடமிருந்து வந்துள்ள நெருக்கடிகளில் பொறியில் அகப்பட்ட நிலையில் அரசு தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.
இதுவே இன்றைய நாட்டின் அரசியல் யதார்த்தமாக உள்ளது, இதேநேரம், மோசமான ஒரு யுத்தத்திற்க முகம்கொடுத்து, பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு, சொல்லொணாத இழப்புகளுக்கு ஆளாகிய பின்பும் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காண முடியாமலும், அழிந்து போயுள்ள வாழ்க்கையைக் உருப்படியாகக் கட்டியெழுப்ப முடியாமலும், சிறுபான்மை இன மக்கள் குறிப்பாக, வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களுக்கு ஒரு நம்பிக்கையான எதிர்காலத்தையும், ஏற்படுத்திக் கொடுக்க முடியாத நிலையில் தமிழ் அரசியல் தலைவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதிலும், அவர்களுக்கான புதிய வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் அவசியமான அரசியல் அதிகாரங்கள் கைகளில் இல்லாமல் இந்தத் தலைவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நம்பிக்கையான நல்லுறவும், உறுதியான ஒத்துழைப்பும் அரசாங்கத்திடமிருந்து இவர்களுக்குக் கிடைக்காமலிருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் தமிழ்த் தலைவர்கள் எடுத்தற்கெல்லாம் வெளியாரை குறிப்பாக சர்வதேசத்தையும், ஐக்கிய நாடுகள் சபையையும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களையும் நம்பியிருக்க வேண்டிய கட்டாய நிலைக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சர்வதேச நாடுகளைப் பொறுத்தமட்டில், இலங்கையின் பிரச்சினையானது, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் என்பவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகவும், இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கு உந்து சக்தியாக இருக்கின்ற வரையில் எல்லையைக் கொண்டதாகவுமே காணப்படுகின்றது. அவ்வப்போது அரசியல் தீர்வு பற்றி பேசினாலும், வலியுறுத்தினாலும்கூட, ஓர் எல்லைக்கு அப்பால் சர்வதேச நாடுகளால் செல்ல முடியாத நிலையிலும், அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாத நிலையிலுமே காணப்படுகின்றன.

இலங்கை அரசு யுத்தவெற்றிவாத அரசியலில் மூழ்கியிருப்பதனால், இனங்களுக்கிடையில் உண்மையான நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையும் ஆர்வமும் அற்றதாகவே காணப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக அதீத பலம் பொருந்தி, அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியாக பல முனைகளிலும் நெருக்கடிகளைக் கொடுத்து நாட்டின் நிர்வாகத்தையே கொண்டு நடத்த முடியாத அளவிற்கு அரசாங்கத்தை சிக்கலில் சிக்க வைத்திருந்த வரையில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு அவசியம், அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அரசாங்கம், யுத்தத்தில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததன் பின்னர், முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்தால் மட்டும் போதும்.
அரசியல் தீர்வு அவசியமில்லை என்ற விபரீதமான ஒரு முடிவில் வந்து நிற்கின்றது. அத்துடன், இந்த முடிவை மட்டும் நடைமுறைப்படுத்தினால் போதும் என்ற நிலையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் அமைதி நிலவுகின்றது. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக யுத்தம் நடைபெற்ற பிரதேசங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் தமக்கு வேண்டியவர்களைப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்.
மாகாணம், பிரதேசம் என்ற நிலையில் உள்ளுர்வாசிகள் தமது பிரதிநிதிகளைக் கொண்டு தமது பிரதேசத்திற்கான நிர்வாகத்தைக் கொண்டு செல்வதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதைக் காட்டி, எல்லாமே இங்கு நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று சர்வதேசத்திற்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றது.

அரசாங்கம் கூறுவதைப் போன்று உள்நாட்டில் நிலைமைகள் நன்றாக இல்லை என்று சர்வதேச நாடுகளும் ஐநா சபையும் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கின்றபோதிலும், இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வர முடியாதிருக்கின்றன. இந்த நிலைமை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகத் தொடர்கின்றன.

உள்நாட்டிலும்சரி, சர்வதேச மட்டத்திலும்சரி மொத்தத்தில் சிக்கல்கள் நிறைந்த ஒரு சூழ்நிலையே இப்போது காணப்படுகின்றது. இந்த சிக்கல்கள் விடுவிக்கப்படுபவதற்கு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள மூன்றாவது பிரேரணை வழி வகுக்குமா என்பது தெரியவில்லை.

0 கருத்துக்கள் :