ஈராக், லிபியாவைப் போன்று சிறிலங்காவுக்குள்ளும் ஊடுருவ முயற்சி – அமெரிக்காவைத் தாக்குகிறார் பீரிஸ்

9.2.14

ஈராக்கிலும், லிபியாவிலும், என்ன நடந்ததோ, அதுபோன்று சிறிலங்காவிலும் ஊடுருவ முயற்சிகள் நடப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
“அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி, சிறிலங்காவுக்குள் தம்மால் செய்ய முடியாததை, மனிதஉரிமைகள் என்ற கருவியைப் பயன்படுத்தி வெளியில் இருந்து செய்ய முயற்சிக்கிறது.
ஒரு நாயைப் போன்று லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டார். ஈராக்கில், அந்த நாட்டின் தலைவர் பலவந்தமாக பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

அந்த தலைவர்கள் தமது நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையாற்றுபவர்களாக இருந்தனர்.
அந்த நாடுகளில் உள்ள வளங்களை கைப்பற்றுவதற்காக, வெளிநாடுகள் தலையிட்டு, பிரச்சினைகளைத் தோற்றுவித்தன.
இப்போது சிறிலங்காவும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மூலம், கடுமையான சவால்களுக்கு முகம் கொடுத்து நிற்கிறது.

இது சிறிலங்கா மக்கள் அனுபவிக்கும் சமாதானத்துக்கு சவால் விடுப்பதாக உள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உள்ளூர் ஆதரவின் மூலம் அகற்ற மேற்கொண்ட முயற்சிகள், தேர்தல்களில் சிறிலங்கா அதிபர் ஈட்டிய வெற்றியின் மூலம் தோற்கடிக்கப்பட்டன.

இதனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையைப் பயன்படுத்தி, தீர்மானங்களைக் கொண்டு வந்து பலவந்தமாக இந்த அரசாங்கத்தை அகற்றும் சூழலை உருவாக்க அனைத்துலக சமூகம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :