முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற அமெரிக்கா வகுக்கும் வியூகம் – சிறிலங்கா கலக்கம்

18.2.14

சிறிலங்காவில் இடம்பெற்ற மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அமெரிக்காவும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரும் முன்னிலைப்படுத்துவது சிறிலங்கா அரசாங்கத்துக்கு புதிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடரில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், மத சிறுபான்மையினர், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அவ்வப்போது கண்டித்து வருகின்றனர்.

இந்தநிலையில், சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கவுள்ள தீர்மானத்தில், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல் விவகாரமும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டால், அது, சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கும், முஸ்லிம் நாடுகளை திசை திருப்பி விடும் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகள், இந்த விவகாரத்தினால், சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்று, சிறிலங்கா அமைச்சரவையில் கடந்த வாரம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சிறிலங்காவுக்கு ஆதரவாகவே குவைத் வாக்களித்திருந்தது.
மத சிறுபான்மையினர் விவகாரத்தினால், தீர்மானத்துக்கு ஆதரவாக குவைத் வாக்களிக்கக் கூடிய நிலை உள்ளதாகவும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதேவேளை, சவூதி அரேபியா இம்முறையே ஐ,நா மனிதஉரிமைகள் பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தாக்கப்பட்ட முஸ்லிம் வழிபாட்டு இடங்கள் தொடர்பான பட்டியலை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசே கையளித்தது தொடர்பான விவகாரமும் சிறிலங்கா அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது.
அப்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைதியாக இருந்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது

0 கருத்துக்கள் :