சிறிலங்காவின் திட்டம் பிசுபிசுப்பு - லலித் வீரதுங்கவை சந்திக்காமல் நழுவிய அமெரிக்க அதிகாரிகள்

5.2.14

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரத் தயாராகி வரும் அமெரிக்காவை சமாதானப்படுத்துவதற்கு, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க வொசிங்டனுக்கு மேற்கொண்ட பயணம் பிசுபிசுத்துப் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவையும், வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவையும், சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் வொசிங்டனுக்கு அனுப்பி வைத்திருந்தது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொள்கை வகுப்பாளர்களை சந்தித்து, சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டை தளர்த்துவதே இவர்களின் நோக்கமாக இருந்தது.
அமெரிக்க அதிகாரிகளிடம் கொடுப்பதற்காக 42 பக்க ஆவணம் ஒன்றையும் லலித் வீரதுங்க கொண்டு சென்றியிருந்தார்.

எனினும், சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று இவர்களால் வொசிங்டனில் சந்திப்புகளை மேற்கொள்ள முடியவில்லை.
மிகச் சிறியளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்களையும், கொள்கை வகுப்பாளர்களையும் மட்டுமே லலித் வீரதுங்க, சஜின் வாஸ் குணவர்த்தன குழுவினரால் சந்திக்க முடிந்துள்ளது.
கடந்த புதன்கிழமை இவர்கள், தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலை சந்தித்து, சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கும்படி கோரியிருந்தனர்.

இந்தச் சந்திப்பு இடம்பெற்ற இரண்டு நாட்களில் பிஸ்வால் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
லலித் வீரதுங்க குழுவினரால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நிஷா பிஸ்வாலை மட்டுமே சந்திக்க முடிந்துள்ளது.
வேறெந்த முக்கிய அதிகாரிகளையும் வொசிங்டனில் சந்திக்க முடியாதது சிறிலங்காவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :