அமெரிக்க உயர்அதிகாரிக்கு நுழைவிசைவு மறுத்தது சிறிலங்கா – வெடித்தது இராஜதந்திர மோதல்

3.2.14

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்நிலை அதிகாரி ஒருவருக்கு நுழைவிசைவு வழங்க சிறிலங்கா அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து வரும் 10ம் நாள் தொடக்கம் 11ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த, பெண்கள் விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் கத்தரின் ருசெல், தமது உயர்மட்டப் பயணத்தை கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில், அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக பெண்களின் உறுதிப்பாட்டை ஊக்குவித்தல், அமைதி, பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்குப் பொறுப்பான- பெண்கள் விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் கத்தரின் ருசெல்லுக்கு நுழைவிசைவு வழங்க சிறிலங்கா அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளதாக அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தூதுவர் ருசெல் ஒரு நாள் கொழும்பிலும், ஒரு நாள் யாழ்ப்பாணத்திலும் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

இவர் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், பெண் நாடாளுமன்ற பிரதிநிதிகள், சிறிலங்கா முழுவதிலும் உள்ள பெண்கள் அமைப்புகளுடன் கலந்துரையாடவும் திட்டமிட்டிருந்தார்.
இவர் நுழைவிசைவு விண்ணப்பத்தை சிறிலங்கா அரசாங்கத்திடம் கடந்த மாதம் 27ம் நாள் சமர்ப்பித்திருந்த நிலையில், அந்த விண்ணப்பம், கடந்த மாதம் 31ம் நாள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட அமெரிக்க அதிகாரியான ருசெல், வெள்ளை மாளிகையின் முன்னாள் மூத்த அதகாரிகளில் ஒருவராவார்.

இவரது பயணம் தடைப்பட்டதை அடுத்து, சிறிலங்காவில் உள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் அமைப்புகள், ஏனைய பிரதிநிதிகளை, இவருடன் காணொலி மூலம் கலந்துரையாட கொழும்பிலுள்ள அமெரிக்கத் துதுரகம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்போது சிறிலங்காவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்புவார் என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உயர் அதிகாரி ஒருவருக்கு சிறிலங்கா நுழைவிசைவு மறுத்துள்ளது மிகப்பெரிய இராஜதந்திர அவமதிப்பாக கருதப்படுகிறது.

0 கருத்துக்கள் :