என்னையும், தலைநகர தமிழ் பேசும் மக்களையும் எவராலும் பிரிக்க முடியாது

11.2.14

மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வாழும் மனச்சாட்சியுள்ள மக்களுக்கு நான் அன்று என்ன செய்தேன் என்றும், இன்று என்ன செய்கிறேன் என்றும் தெரியும்.
மக்கள் நொந்துபோன காலங்களில் காணாமல் போயிருந்தவர்கள், இன்று தேர்தல் காலத்தில் திடீரென சிலர் தலைநகர வீதிகளில் உலா வருகிறார்கள்.

இவர்களை முன்னாலே விட்டு பின்னாலே, இவர்களை பார்த்து மனச்சாட்சியுள்ள மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள். மனச்சாட்சியுள்ள மக்கள் சிரிப்பது இந்த வீதி உலாகாரர்களுக்கு விளங்கவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முன்னணியின் கொழும்பு, கம்பஹா மாவட்ட வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் இன்று கொழும்பு பிரைட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்புரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
என்னை அழித்து, ஒழித்து கொழும்பிலே என் குரலை நிறுத்தும்படி இன்று சிலருக்கு கட்டளை இடப்பட்டுள்ளது. அந்த கட்டளையை சிரத்தையுடன் எடுத்துகொண்டு இவர்கள் மேல்மாகாண தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களால் என்னை எதுவும் செய்துவிட முடியாது.
2008ல் இருந்து என்னை அழிக்க நினைத்து செயற்பட்ட ஒவ்வொருவரையும் நினைத்து பாருங்கள். அவர்கள்தான் அழிந்து போனார்கள். நான் எழுந்து நிற்கிறேன். நிர்க்கதியான மக்களுக்காக உயிரையும் துச்சமாக மதித்து நாம் போராடினோம்.

கப்பம், கடத்தல், மிரட்டல் என்று ஏகப்பட்ட துன்பங்களுக்கு முகங்கொடுத்த நூற்றுக்கணக்கான நமது வர்த்தக சகோதர்களை நான் காப்பாற்றியுள்ளேன். இது சம்பந்தப்பட்டவர்களின் மனசாட்சிகளுக்கு தெரியும். ஆபத்துக்கு உள்ளான பெருந்தொகையானவர்களை என் சொந்த தாய்மார்களாக, சகோதரர்களாக நினைத்து நான் போராடியுள்ளேன்.

அந்த தர்மம் அன்றும், இன்றும் என் தலையை காத்து நிற்கிறது. அது இனி என்றும் என்னை காத்து நிற்கும். எனவே என்னை அழிக்க என் முதுகை நோக்கி எவராவது குத்துவாளை வீசினாலும், அது என் கழுத்தில் முத்துமாலையாகத்தான் விழும். ஆகவே துணிச்சலுடன் சென்று ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்களாக மக்களை சந்தியுங்கள்.

இந்த கட்சியின் வேட்பாளர்கள் என்று சொல்வதே மக்கள்மத்தியில் உங்களுக்கு மரியாதையை தரும். கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வாழும் நமது மக்களை தேடி வீடு வீடாக செல்லுங்கள். எனது செய்தியை எடுத்து செல்லுங்கள்.

0 கருத்துக்கள் :