" இன்று சு(தந்திர) தினமாமே!!!!!!!!!!!!!"

4.2.14


சுதந்திரம்..... சொல்லவே ஆசையா இருக்கு......
             அனுபவிச்சா.....எப்படி இருக்கும்.......!
அனுபவித்தேன் ...ஆனால் இன்றல்ல.
தமிழனத் தமிழன் ஆண்ட அந்த குறுகிய காலம்.....!
ஆம்....,
பொம்பர் அடித்தாலும் (விமானக் குண்டுத்தாக்குதல்)
பங்கரில் (பதுங்கு குழி)அரைநாள் வாழ்வே கழிந்தாலும்
நாங்கள் நிம்மதியாய் வாழ்ந்த நாட்கள் அவை...
நாள்தோறும் பல சாவீடு கண்டாலும்...
வாழ்நாளில் பழக்கப் பட்ட சம்பிரதாய வாழ்வியல் அது...

அற்புதமானது.....!
எங்கள் நிலத்தின் எங்களது ஆட்சியில்
நாங்கள் பேசினோம்....தடையின்றி,
நாங்கள் எழுதினோம் ...தடையின்றி...,
நாங்கள் சுவாசித்தோம்....தடையின்றி...,
ஆடினோம்...,பாடினோம்...,உண்டோம்...,உறங்கினோம்...!
எல்லாம் எமது சுய விருப்பில்..!
காரிருள் நள்ளிரவிலும்....,

கன்னியவள் தனித்துவருவாள் பயமின்றி...!
காரணம் அங்கே எங்கள் கரிகாலன் ஆட்சியது!
கையில் சுடுகுழலுடன்...காளையரும் ,காரிகைகளும்....,
அவை எம்மை அச்சுறுத்தவல்ல..!மாறாய்,
எம்மை,எம் மானங்களைப்  பாதுகாத்தன.
எம்மினத்தின் பண்பாடு ,பழக்கவழக்கங்கள்,அடையாளங்கள்,
கம்பீரமாய் கட்டுறுதியாய் நெடுத்து நின்ற நாட்கள் அவை...

ஆனால்....இன்று???????????
சுதந்திரம்....
 மீண்டும் ஒருமுறை அகராதியில் அர்த்தம் காணவேண்டிய
செல்லரிக்கப்பட்ட அரிய சொல் அது.....!
ஸ்ரீ லங்காவின் ஆட்சியாளர்கள் கற்றுத் தெளிய வேண்டிய
  வார்த்தை அது!

1948 ல் பிரிட்டீஷ் காரனால் பிச்சை இடப்பட்ட வெற்று...
வார்த்தை அது.!...-பிரிட்டீஷ் காரன் ,
இந்தியாவிற்கு இறைத்த நீரினால் பிழைத்து,-இன்று
கெட்ட வார்த்தை அது.
ஆம்...சுதந்திர தினம்...,
இலங்கையின் ஆட்சியாளர்கள் மட்டுமே..,
தங்கள் கச்சைகளைக் கட்டிக் காற்றில் பறக்கவிடும் கரிநாள்..!
தமிழனின் ,இஸ்லாமியனின் அப்பாவிச் சிங்களனின்
மூச்சடக்கி.பேச்சடக்கி அவன் பூதவுடல் மேலே களியாடும்.
காட்டேரிகளின் ஹாப்பி (சந்தோஷ) நாள்....!

தன்னாட்டிலேயே...தன்னினதுக்கு சுதந்திரமில்லை!
தன்னை ஆட்சியில் அமரக் புள்ளடியிட்டவனுக்கு,
ஒருபுடி அரிசிக்கு வழியில்லை....!
ஊடகங்களுக்கு சுதந்திரமில்லை....,
கடலில் பிழைப்பவனுக்கு சுதந்திரமில்லை...!
காற்றில் பட்டம் விட சுதந்திரமில்லை....!

மாணவரின் கல்வித் தேடலுக்கு சுதந்திரமில்லை..!-அங்கே,
மனிதனின் சுய கருத்துகளுக்கு சுதந்திரமில்லை...!
மும்மதத் தலைவர்களுக்கும் சுதந்திரமில்லை...!
ஏன்??....பாவம்,
ஆலயங்களில் இறைவனுக்கு மணி எழுப்பக் கூடச் சுதந்திரமில்லை..!
உண்ணச் சுதந்திரமில்லை!உடுக்கச் சுதந்திரமில்லை!
உறங்கச் சுதந்திரமில்லை!உறவுகளை காணச் சுதந்திரமில்லை!
பேச்சுக்கு...,விடும் மூச்சுக்கும் சுதந்திரமில்லை...!
கேவலம் சொன்னால் நகைப்பீர்கள்!
அதுக்கு கூட சுதந்திரமில்லாத இனவெறி நாடு...இலங்கை.
 அங்கே இன்று சுதந்திர தினமாம்.....!
எங்களுக்கோ அது என்றுமே கரிநாள் தான்யா!
                                   நன்றி.
 இன்றைய நாளில் கூட ........
சிங்கள வல்லாதிக்கத்தின் இரத்த கைகளால் கழுத்து நெரிக்கப் பட்டு சுதந்திர தாகத்துடன் இறந்த அனைத்து இலங்கையின்
பிரஜைகளின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திக்கும்....
  உங்கள் அன்பான ...
                                                                 ஈழப்பிரியன்...

0 கருத்துக்கள் :