சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - தென்கொரியா, ஜப்பானுக்கு அமெரிக்கா கடும் அழுத்தம்

8.2.14

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்குப் பக்கபலமாக இருக்குமாறு சிறிலங்காவின் இரு பிரதான முதலீட்டாளர்களான ஜப்பான், மற்றும் தென்கொரியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராஜதந்திர வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஆசிய, பசுபிக் பிராந்திய குழுவில் சிறிலங்காவின் நிலையை மேலும் பலவீனப்படுத்துவதில் அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஜப்பான் நடுநிலை வகித்தது. தென்கொரியா ஆதரவு அளித்தது.
மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவளித்தன.

13 நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்தன. ஒரு நாடு சமூகமளித்திருக்கவில்லை.
2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, 24 நாடுகள் ஆதரித்தன, 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்திருந்தன.
அப்போது தென்கொரியாவும், ஜப்பானும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உறுப்பு நாடுகளாக இருக்கவில்லை.
ஆசிய,சுபிக் குழுவில் இடம்பெற்றிருந்த இந்தியா இந்த இரண்டு தீர்மானங்களையும் ஆதரித்திருந்தது.
கடந்த ஆண்டுகளில் தீர்மானத்தை எதிர்த்த சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா ஆகிய ஆசிய பசுபிக் குழு நாடுகள், இம்முறையும் அதேகுழுவில் இருக்கின்றன.

இம்முறை, இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.
ஆசிய பசுபிக் குழுவில் இம்முறை வியட்னாம் இடம்பெற்றுள்ளது சிறிலங்காவுக்கு சாதகமான விடயம் என்று சிறிலங்கா அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, புதிதாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குத் தெரிவாகியுள்ள தென்னாபிரிக்காவுக்கும், தீர்மானத்தை ஆதரிக்கும்படி கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படும்.

தென்கொரியா மற்றும் ஜப்பான் மீது விடுதலைப் புலிகளால் அழுத்தங்கள் கொடுக்க முடியாது போனாலும், தென்னாபிரிக்கா மீது அவர்களால் அழுத்தங்களைக் கொடுக்க முடியும் என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :