ராஜீவ் பெயரில் நிகழும் பச்சைப்படுகொலையை தடுத்து நிறுத்துவோம்

26.2.14

ராஜீவ் கொலை வழக்கு முறையாக விசாரிக்கப்படாமல் விசாரணை அதிகாரிகளால் புனையப்பட்ட ஆவணங்களை கணக்கில்கொண்டு உச்சநீதிமன்றம் நிரபராதிகளான  முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி எஸ். நளினி,எஸ்.ஜெயக்குமார்,இராபர்ட் பயஸ், இரா.பொ.இரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது.ஜெயின் கமிஷன் அறிக்கையின் படி குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணிய சாமி இதுவரையில் விசாரிக்கப்படவில்லை.

 நிரபராதிகளான இந்த ஏழ்வரும் 23 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் இருந்து வருகின்றனர். முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோர் தமக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை நீக்க கருணை மனு அளிக்கப்பட்டு பதினோரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. அந்த பதினோரு ஆண்டுகளும் எந்த நாளிலும் மரண தண்டனைக்கான அறிவிப்பு வரலாம் என்ற மன உளைச்சலோடு கழிந்தன. இந்நிலையில் இவ்வழக்கினை விசாரித்த முன்னாள் சிபி ஐ அதிகாரி தியாகராஜன் தாம் இவ்வழக்கில் பதியப்பட்ட வாக்குமூலத்தில் தவறு நிகழ்ந்துவிட்டதாக ஒப்புக்கொண்டார். இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்பது இந்த வாக்குமூலத்தில் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது. ஆகையினால் இந்த தண்டனை என்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

அடுத்த கட்டமான இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை  ஆயுள் தண்டனையாக குறைத்து, மேலும் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இந்த ஏழு பேருக்கும் விடுதலை வழங்க சட்ட ரீதியாக வகைசெய்யும் வழிமுறைகளை தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்படி தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் இந்த ஏழு போரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார்.


இந்நிலையில் மத்திய அரசு, தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.தமிழகத்திற்கு சட்டப்படி உள்ள உரிமைகளை கூட ஏற்க மறுத்து இந்த ஏழு நிரபராதிகளை விடுதலை செய்வதை தடுத்து வருகின்றது. இதில் மத்திய அரசோடு தேசிய கட்சிகளான காங்கிரஸ்,பாஜக,ஆம் ஆத்மி போன்றவையும் தமிழக அரசு அறிவித்த விடுதலையை எதிர்த்து வருகின்றன.மேலும் வட இந்திய மக்களிடம் தமிழர்களுக்கு எதிரான கருத்துருவாக்கம் செய்யும் விதமாக வட இந்திய ஊடகங்கள் நிரபராதி ஏழ் வரின் விடுதலையை கடுமையாக விமர்சித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை  ஒளிபரப்பியும்,பதிதிரிகை செய்திகள் வெளியிட்டும் வருகின்றன.


இந்த நிலையில் தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து தமிழக அரசு அறிவித்தது போல் இந்த ஏழ்வரையும் விடுவிக்க வேண்டியது அவசியமாகிறது. 


ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்.
தமிழகத்தின் உரிமையில் தலையிடாதே.
ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மக்கள் விரோத சுப்ரமணிய சாமியை கைது செய்து விசாரி.....


ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 2-3-2014 அன்று மாலை 4 மணிக்கு ஒன்று கூடுவோம்.


ராஜீவ் பெயரில் நடக்கும் பச்சை படுகொலையை தடுத்து நிறுத்துவோம்

0 கருத்துக்கள் :