விமல் வீரவன்சவால் வந்த வினை

21.2.14

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப்பின் பயணத்தின் போது, சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுப்பதற்கு சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்சவே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமல் வீரவன்சவின் நடவடிக்கைகளே சிறிலங்கா அரசாங்கத்தை பூமராங் போன்று திருப்பித் தாக்கியுள்ளது.

ஸ்டீபன் ராப் சிறிலங்கா வந்த போது, அவரது சந்திப்புகள் தொடர்பாக குறைந்த முக்கியத்துவம் கொடுப்பதற்கும், அது தொடர்பான தகவல்களை சிறியளவில் வெளியிடுவது அல்லது முற்றாகவே தவிர்ப்பதற்கும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன் வந்திருந்தது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக, விமல் வீரவன்ச நடத்திய எதர்ப்பு போராட்டம், இந்த வாக்குறுதியை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது.

அமெரிக்க அதிகாரிகளை அவமதிக்கும் வகையிலான இந்தப் போராட்டத்தின் பின்னணியில் சிறிலங்கா அமைச்சர் ஒருவரே இருந்ததால், எல்லாமே தலைகீழாகியது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர்,
“சாத்தியமானளவுக்கு ஸ்டீபன் ராப்பின் பயணம் தொடர்பான தகவல்களுக்கு குறைந்த முக்கியத்துவம் அளிப்பது என்று அமெரிக்கத் தூதரகத்துக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இந்தப் போராட்டம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவன்சவின் போராட்டத்துக்கு, அமெரிக்கத் தூதரகம் எதிர்ப்புத் தெரிவித்த போது, அதை ஒரு அமைச்சர் மட்டுமே நடத்தியதாகவும், அதை சிறிலங்கா அரசாங்கத்தின் அணுகுமுறையாக கருத வேண்டாம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, பதிலளித்திருந்தது.
ஆனால், அந்தப் போராட்டத்தின் விளைவு, டுவிட்டரில் பிரதிபலித்தது.

2009 ஜனவரியில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று குறிப்புடன் படத்தை வெளியிட்டு அமெரிக்கத் தூதுரகம் பதிலடி கொடுத்தது என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :