ஜெனிவா தீர்மானம் அமைதிக்கு எதிரான மோசமான குற்றம் – சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு

5.2.14

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் அமைதிக்கு எதிரான மோசமான குற்றச்செயல் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இன்று காலை நடைபெற்ற சிறிலங்காவின் 66 வது சுதந்திரநாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக கொடுக்கப்பட்ட விலைகளையும், விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்களையும் பலரும் மறந்து விட்டனர்.
ராஜிவ்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும், பொதுமக்களையும் விடுதலைப் புலிகள் கொன்றனர்.

விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் நாட்டிலுள்ள மக்களுக்கு உண்மையான சுதந்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் எந்த அடிப்படையும் அற்றவை.
இவை அமைதியை விரும்பாதவர்களின் செயல்பாடுகள் .
பிரிவினைவாத அரசியல் நிகழ்ச்சிநிரலை வைத்திருப்பவர்கள் வழங்கும் தகவல்களை வைத்தே இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

வடக்கில் சுதந்திரத்தை அனுபவிக்கும் மக்களை மீண்டும் கேடயமாக்க சில மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் முற்படுகின்றன.
இதனை வட பகுதி மக்கள் புரிந்திருக்க வேண்டும்.

மக்களை காப்பாற்றுவதற்கும் , மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்கும் , ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் என்று கூறித் தான் பிற நாடுகளின் மீது அவர்கள் கை வைப்பார்கள்.
தமிழ் மக்களுக்கு நாம் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது வேறு நாட்டிற்கு அடிமையாகவோ அல்லது கேடயங்களாக வாழ்வதற்கோ அல்ல.

அம்மக்களுக்கு நியாயமான மனிதஉரிமைகளை அனுபவிக்கும் வகையில் சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்துள்ளோம்,
சிறிலங்கா மக்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்தை எவரும் அபகரித்துக் கொள்வதற்கு இடமளிக்கப் போவதில்லை.” என்றும் குறிப்பிட்டார்.

0 கருத்துக்கள் :