நவிபிள்ளையின் அறிக்கைக்கு மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்பு

17.2.14

ஜெனிவாவில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், சிறிலங்கா மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது.

நவநீதம்பிள்ளையின் அறிக்கையின் முக்கிய பகுதிகள் சில, சண்டே ரைம்ஸ் வாரஇதழில் நேற்று வெளியாகியுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் பெண் பேச்சாளர் மீனாட்சி கங்குலி,

“சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஒன்றே, ஒரே வழியாக இருப்பதாக நாம் நம்புகிறோம்.

ஏனென்றால், ராஜபக்ச அரசாங்கம், நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை நடத்தவோ, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கோ அரசியல் ரீதியான ஈடுபாட்டைக் காட்டவில்லை.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகள் இந்த முயற்சிக்கு வரவேற்புத் தெரிவிக்கும் என்று நாம் நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஊடகங்களில் வெளியாகியுள்ள , நவநீதம்பிள்ளையின் அறிக்கை தொடர்பாக ஐ.நா எந்தக் கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.

0 கருத்துக்கள் :