சிறிலங்காவுக்கு எதிராக பயணக் கட்டுப்பாடுகள், சொத்துக்களை முடக்குவது குறித்து பிரித்தானியா ஆலோசனை

13.2.14

சிறிலங்காவுக்கு எதிராக, பயணத்தடை மற்றும் சொத்துக்களை முடக்குதல் உள்ளிட்ட தடைகளை விதிப்பது குறித்து, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சின் அதிகாரிகளுடன், புலம்பெயர் தமிழர்கள் பேச்சு நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், சிறிலங்கா விவகாரம் குறித்து, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்துடன் ஆலோசனை நடத்திய பின்னர், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
கடந்த 10ம் நாள் திங்கட்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தின், பொதுச்சபையின் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் பங்கேற்ற பல்வேறு புலம்பெயர் அமைப்புகளிடையே, வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும், சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், உடனடியாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா தலைவர்களின் சொத்துகளை முடக்குவது குறித்தும் ஜெனிவா தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

சாட்சிகளைப் பாதுகாப்பதற்கும், சிறிலங்கா அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவதற்கும், ஜெனிவா தீர்மானத்தில் கடுமையான விதிமுறைகளை சேர்க்க வேண்டும என்று. பிரித்தானிய மற்றும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் லீ ஸ்கொட், சியோபெய்ன் மக்டொனா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு பலமான வாய்ப்புகள் உள்ளதாக, பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :