அனைத்துலகப் போர்க் குற்ற விசாரணையை நிராகரிக்கும் சிறிலங்கா - பிரித்தானிய ஊடகம்

3.2.14

சிறிலங்காவில் தொடர்ந்தும் இடம்பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் காணாமற் போன 13,000 வரையான மக்கள் தொடர்பாகவும் பொறுப்பளிக்குமாறு பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகியன வலியுறுத்தி வருகின்றன.

இவ்வாறு The Telegraph ஊடகத்தின் தென்னாசிய செய்தி ஆசிரியரான Dean Nelson South Asia Editor எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

தமிழர் பிரதிநிதிகளால் ஆளப்படும் வடக்கு மாகாண சபையானது சிறிலங்கா மீது அனைத்துலகப் போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இதனை நிராகரித்துள்ளது.

சிறிலங்கா தனது நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தான் வலியுறுத்துவேன் என கடந்த ஆண்டு சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் சிறிலங்கா மீது அனைத்துலப் போர்க் குற்ற விசாரணை ஒன்ற மேற்கொள்ளப்பட்டால் அது நாட்டில் புதியதொரு குழப்பத்தை உண்டுபண்ணும் எனவும் உண்மையான மீளிணக்கப்பாட்டையும் பின்னடையச் செய்யும் என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் செயலர் லலித் வீரதுங்க எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டு மார்ச்சில் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது அனைத்துலகப் போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஆதரித்து அமெரிக்கா தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரவுள்ள நிலையில் லலித் வீரதுங்க வோசிங்ரனில் வைத்து இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

போர்க் குற்றங்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில் மற்றும் நாட்டில் உண்மையான மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளமை தொடர்பில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ளன. சிறிலங்காவில் தொடர்ந்தும் இடம்பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் காணாமற் போன 13,000 வரையான மக்கள் தொடர்பாகவும் பொறுப்பளிக்குமாறு பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகியன வலியுறுத்தி வருகின்றன.

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதுகாப்பு வலயம் என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சம் புகுந்திருந்த மக்களைக் குறிவைத்து சிறிலங்கா இராணுவப் படைகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் 40,000 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வழிநடத்தப்படும் வடக்கு மாகாண சபையானது இவ்வார முற்பகுதியில் சிறிலங்கா மீது அனைத்துலக போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது. அத்துடன் மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வடக்கு மாகாண சபை தனது பிரதிநிதிகளை அனுப்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்பாக வடக்கு மாகாண சபை கணக்கெடுப்பை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

போரில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதானது இனப்படுகொலைக்குச் சமமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் மீது போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளதானது அழுத்தத்தை அதிகரித்துள்ள அதேவேளையில், அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டால் புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட மீறல்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கும் என லலித் வீரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்த மேலும் ஐந்து ஆண்டுகள் தேவை எனவும் இந்நிலையில் அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டால் அது நாட்டின் செழுமையையும் அயல்நாடான இந்தியாவுடனான உறவையும் நாசம் செய்யும் எனவும் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
"ஒரு நாளிலோ அல்லது இரண்டு நாளிலோ நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாது. சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் போர் ஆரம்பித்த 1980 களிலிருந்து இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட வேண்டும்.

 இதில் இரண்டு ஆண்டுகாலம் வரை சிறிலங்காவில் இந்திய அமைதி காக்கும் படைகள் கடமையில் ஈடுபட்ட போது மேற்கொண்ட மீறல்களும் விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு விசாரிக்கப்படும் போது இது இந்தியாவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்" என லலித் வீரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துக்கள் :