அமெரிக்கத் திட்டத்தை மீண்டும் பரிசீலனைக்கு எடுக்கிறது சிறிலங்கா

19.2.14

வடக்கு மாகாணத்தில் மூன்று பாடசாலைகளை முழு வசதிகளையும் கொண்டதாக புனரமைக்க, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடம் முன்வைத்த திட்டத்தை, சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் மகாவித்தியாலயம், முல்லைத்தீவு மாவட்டத்தில், மல்லாவி பெண்கள் பாடசாலை, மன்னார் மாவட்டத்தில், முசலி மகா வித்தியாயம் ஆகியவற்றை முழுவசதிகளுடன் புனரமைத்துத் தர அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடம் முன்வந்திருந்தது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் சிறிலங்கா கல்வி அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட இந்த யோசனையை, சிறிலங்கா கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

ஆனால், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தீ்ர்மானம் கொண்டு வர முடிவு செய்திருந்த விவகாரத்தினால், கோபத்தில் இருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்த திட்டத்தை அமைச்சரவையில் நிராகரித்திருந்தார்.

அமெரிக்க பசுபிக் கட்டளைப் பீடத்தினால் முன்வைக்கப்பட்ட மூன்று பாடசாலைகளை நவீன வசதிகள் கொண்டதாக புனரமைக்கும் இந்த திட்டம், இருமுனை நோக்கம் கொண்டதாகும்.
அடிப்படையில் இது கல்வி நோக்கம் கொண்டதாக இருந்தாலும், தேசியப் பேரிடர் ஏதேனும் நிகழ்ந்தால், நூற்றுக்கணக்கானோருக்குப் புகலிடம் வழங்கும் நலன்புரி நிலையமாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.

நாடுகடந்த மனிதாபிமான அனர்த்த உதவித் திட்டத்தின் கீழ் இந்த உதவியை வழங்க பசுபிக் கட்டளைப் பீடம் முடிவு செய்திருந்தது.
தற்போது இந்த திட்டத்தை மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :