வருகை நுழைவிசைவுத் திட்டத்துக்குள் சிறிலங்காவை உள்ளடக்க இந்தியா மறுப்பு

6.2.14

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க, 180 நாடுகளின் குடிமக்களுக்கு, வருகை நுழைவிசைவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள போதிலும், அதில் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளை உள்ளடக்க இந்தியா மறுப்புத் தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் நேற்று நடந்த உயர்மட்ட மாநாடு ஒன்றில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், மற்றும் வெளிவிவகார அமைச்சு, புலனாய்வுத்துறைகள், சுற்றுலாத்துறை, உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில், இந்திய விமான நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு வருகை நுழைவிசைவு வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.
ஏற்கனவே, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், உள்ளிட்ட 11 நாடுகளுக்கு வருகை நுழைவிசைவுகளை இந்தியா வழங்கி வருகிறது.
இதனை 180 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.

எனினும், சிறிலங்கா, பாகிஸ்தான், சூடான், ஈரான், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக் ஆகிய எட்டு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளின் பயணிகளுக்கு வருகை நுழைவிசைவு வழங்கும் திட்டத்தை, அறிமுகப்படுத்த நேற்றைய கூமட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்தியாவின் திட்ட அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்தியாவின் 26 விமான நிலையங்களிலும், 180 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு வருகை நுழைவிசைவு வழங்கப்படவுள்ளது.

இது ஒரு மாதம் செல்லுபடியாகத்தக்க இலத்திரனியல் நுழைவிசைவாக இருக்கும்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 5,6 மாதங்கள் தேவைப்படும் என்றும், வரும் ஒக்ரோபர் சுற்றுலாக் காலத்தில் இது நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :