போர்குற்றங்களில் ஈடுபட்ட கருணா, பிள்ளையான், டக்ளஸ் மீது நடவடிக்கை இல்லை – நவிபிள்ளை குற்றச்சாட்டு

25.2.14

சிறிலங்காவில் அமைச்சர்களாக இருக்கும், மூத்த துணை ஆயுதக்குழுத் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகியோர் மீதும், முன்னாள் கிழக்கு மாகாண முதல்வரான பிள்ளையான் மீதும், மோசமான மீறல் குற்றச்சாட்டுகள் உள்ள போதிலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஐ.நா இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள, சிறிலங்கா தொடர்பாக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், துணை ஆயுதக்குழுவினர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆயுதக்குழுக்களுக்கு (சில துணை ஆயுதக்குழுக்களாகவும் செயற்பட்டுள்ளன) எதிரான மோசமான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும், அவர்களின் அரசியல் தொடர்புகள் எத்தகையதாக இருந்தாலும், சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 9.213 இலக்க பரிந்துரை சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தேசிய நடவடிக்கைத் திட்டத்தின்படி, 76 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு தீவிரவாத விசாரணைப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில தொடர்பாக விசாரணைகள் நடப்பதாகவும், சிறிலங்கா அரசாங்கம் 2014 ஜனவரி மாதம் சிறிலங்கா அரசாங்கம் அறிக்கை அளித்தது. துணை ஆயுதக்குழுக்கள் பெருமளவில் கலைக்கப்பட்டுள்ள போதிலும், ஆயுத மோதல்களின்போது, இடம்பெற்ற மோசமான குற்றங்கள் தொடர்பான பெருமளவு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களான, தற்போது அமைச்சர் பதவியில் உள்ள, இரண்டு மூத்த துணை ஆயுதக்குழுத் தலைவர்களான, டக்ளஸ் தேவானந்தா, கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராகவோ, அல்லது முன்னாள் கிழக்கு மாகாண முதல்வரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராகவோ, இன்று வரை எந்த நடவடிக்கையும எடுக்கப்படவில்லை. கருணாவும் பிள்ளையானும், விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள். பின்னர் அவர்கள் பிரிந்து, கருணாகுழு என்ற பெயரில், செயற்பட்டதாகவும், இவர்கள், போர்க்குற்றங்களில் ஒன்றான சிறார்களை படையில் சேர்க்கும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்ததாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும், சிறுவர்கள், ஆயுதமோதல்கள் தொடர்பான ஐ.நா செயலரின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துக்கள் :