இனி எனக்கு கெட்ட கனவுகள் வராது! பேறிவாளனின் தாயார் உருக்கம்!

18.2.14


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானது செய்தி அறிந்ததும், பேறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எங்களது 23 வருடப் போராட்ட வாழ்வில் முதல் திருப்புமுனையாக கருதுவது தியாகராஜன் ஐ.பி.எஸ்.சின் மனந்திறந்த பேட்டியை உள்ளடக்கிய உயிர்வலி ஆவணப்படத்தைத்தான். எங்கள் மீது இருந்த கொலைப் பழியை அகற்றியது. என் மகன் நிரபராதி என்பதை உலகிற்கு உணர்த்தி அவனது விடுதலைக்கான ஆதரவை பெருக்கியது.

இன்று நீதிபதி சதாசிவம் அமர்வின் தீர்ப்பு இரண்டாவது திருப்பு முனையாகும். இழந்து போன என் மன நிம்மதியை இது மீட்டிருக்கிறது. இனி எனக்கு கெட்ட கனவுகள் வராது. தூக்கத்தில் இருந்து எழுந்து திடீரென்று மிரண்டு அலற மாட்டேன். இரவுகளில் வரும் அலைபேசி அழைப்பு என் ரத்த கொதிப்பை அதிகரிக்காது. ஒவ்வொரு நாளும் அதிகாலை தொலைக்காட்சி செய்தியை பதட்டத்துடனேயே பார்த்து விட்டு பிறகு தெளியும் நிலை இருக்காது. ஒவ்வொரு முறையும் சிறையில் இருந்து வெளிவரும் பொழுது சொல்ல முடியாத துக்கம் என் தொண்டையை அடைக்காது.

தூக்கு தண்டனையை ஒழிக்கும் கூறுகள் கொண்ட ஒரு முன்னோடி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர் சதாசிவத்தின் அமர்விற்கு எனது மனமார்ந்த நன்றி மட்டும் இன்றி உலகெங்கும் நிறைந்துள்ள மனித நேய ஆர்வலர்கள் நன்றிகளும் பாராட்டுகளும் என்றென்றும் நிலைத்திருக்கும்.

வலியும் வேதனையும் நிறைந்த எனது போராட்ட பாதையில் பல்வேறு காலகட்டத்தில் என்னுடன் பயணித்த பல்வேறு அமைப்புகளையும் தலைவர்களையும் கருணை உள்ளங்களையும் இன்று நான் நினைவு கூறுகிறேன். 26 தமிழர் உயிர்காப்பு நிதிக்குழு என்று நெடுமாறன் தொடங்கி இன்றுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஒவ்வொரு தலைவரும் உறுப்பினரும் இந்த தீர்ப்பிற்காக ஏதோ ஒரு விதத்தில் பங்களித்திருக்கிறார்கள்.

99 வயதிலும் என் மகனுக்காகவும், ஒட்டமொத்த மரண தண்டனை ஒழிப்பிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தலைமை ஏற்று நடத்தி வரும் மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் தமிழக பொறுப்பாளராக இருந்து கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து மரண தண்டனை எதிர்ப்பிற்காக பாடுபட்ட செல்வராசு, முருகையனும், மரண தண்டனை எதிர்ப்பில் ஒத்த கருத்துடைய பல்வேறு இயக்கங்களின் மரண தண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பும், இந்த வெற்றியில் பெரும் பங்காற்றினர். வழக்கறிஞர்கள் பிரபு, பாரி ஆகியோர் பொறுப்பின் கீழ் மரணதண்டனைக்கு எதிராக வழக்காடிய 15–க்கும் மேற்பட்ட கொண்ட வழக்கறிஞர் குழுவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடிவாம்பாள், சுஜாதா மற்றும் கயல்விழி என மூன்று வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தை எழுச்சியுறச் செய்ததை நினைவு கூறுகிறேன். செங்கொடி என்ற இளம்பெண்ணின் உயிர் தியாகம் ஈன்றெடுத்த ஒரு உன்னத தீர்ப்பு இன்று நம் கைகளில் இத்தீர்ப்பை அவளுக்கே அர்ப்பணிக்கிறேன்.

தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இயற்றப்பட்ட ஒரு வரலாற்று தீர்மானத்திற்கு கிடைத்த வெற்றியும் அங்கீகாரமும் இந்த தீர்ப்பு. இவர்களின் விடுதலையை வலியுறுத்தி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடம் எனது கோரிக்கையை முறையிட உள்ளேன். தாயுள்ளம் கொண்டு அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

என்னுடைய கண்ணீரையும் வேதனையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஊடகவியலாளர்களுக்கும், அவர்களின் மனசாட்சிக்கும், உன்னத உணர்விற்கும், நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னுடன் பயணித்ததால் பல இழப்புகளை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் இன்று கொண்டாடி மகிழ ஒரு நல்ல வாய்ப்பு. எல்லோரும் இந்த தீர்ப்பை மனதார வரவேற்று பாராட்டி கொண்டாடுவோம்.

ஆனால் மீண்டும் சொல்கிறேன். இவர்கள் நிரபராதிகள். தடம்புரண்ட நீதியால் சொல்லனாத் துயரம் அனுபவித்தவர்களுக்கு தண்டனை குறைப்பு மட்டும் தானா? நிரபராதி என்று தெரிந்த பின்னரும் சிறை வாழ்க்கை பெரும் அநீதி என்பதுணர்ந்து சாதி மத இனப் பாகுபாடு அற்று மனித நேயம் கொண்டோர் அனைவரும் ஓரணியில் நின்று, இவர்களின் விடுதலையை விரைவுபடுத்த தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

0 கருத்துக்கள் :