ஜெயலலிதாவிடம் கண்ணீர்மல்க நன்றி கூறும் அற்புதம்மாள்

19.2.14

முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று (19.2.2014) தலைமைச்செயலகத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுத்தமைக்காக தனது நன்றிகளை கண்ணீர் மல்க தெரிவித்துக்கொண்டார்.

அப்போது,  ‘’ஒரு அம்மாவின் உணர்வை புரிந்துகொண்டீர்கள் அம்மா.  எனது மகன் என்னிடம் வந்து சேருவானா என்று பயந்திருந்தேன்.  அந்த பயம் இன்று போய்விட்டது அம்மா’’ என்று நெஞ்சம் நெகிழ நன்றி கூறினார்.
இந்த விடுதலையை ஈழ விடுதலையின் முதல் படியாகவே பார்க்கிறேன் : சீமான்
ராஜீவ்காந்தி கொலை  வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருந்த முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோர் தூக்குத்தண்டனையில் இருந்து விடுதலை செய்யப் படுகிறார்கள்.
 
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். 23 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாளின் போராட்டத்துக்கும், தங்கை செங்கொடியின் உயிர் தியாகத்துக்கும் கிடைத்த வெற்றி. தலைமை நீதிபதி சதாசிவம், மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி ஆகியோரின் பங்கும் 7 பேரின் விடுதலையில் மகத்தானது.
 
போராட்டமும், புரட்சியும் எப்போதும் தோற்றுப் போகாது என்பதற்கு இந்த விடுதலையே உதாரணமாகும். அற்புதம் அம்மாளின் மனநிலையில் இருந்து தாய் போல தமிழக முதல்–அமைச்சர் சிந்தித்து பார்த்திருக்கிறார்.

அதனால் தான் கோரிக்கை வைக்கும் முன்னரே விடுதலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை தமிழ் தேசியமே வரவேற்கிறது. இந்த விடுதலையை ஈழ விடுதலையின் முதல் படியாகவே பார்க்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.


0 கருத்துக்கள் :