அனைத்துலக சமூகத்திடம் தீர்வு கோருவதில் என்ன தவறு? – முதல்வர் விக்னேஸ்வரன் கேள்வி

18.2.14

உள்நாட்டில் தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்கள் அனைத்துலக சமூகத்திடம் தீர்வு கேட்டு நிற்பதில் தவறேதும் இல்லை என்று வட்க்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிபிசி சிங்கள சேவைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இறுதிக்கட்டப் போரின்போது நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லாதபோது, அது தொடர்பாக அனைத்துலக விசாரணை கோருவதில் என்ன தவறு உள்ளது?
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வடக்கு மாகாணசபைக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

எங்களோடு பேச்சு நடத்துகின்றபோது, எங்களுக்கு பலவற்றைத் தருவதாக வாக்குறுதி அளித்தார்.
ஆனால் எங்களுக்கு கடைசியில் எதுவுமே கிடைக்கவில்லை.
எங்களோடு, நல்லபடியாக, அழகாக பேசினார். ஆனால் எதனையுமே இதுவரை வழங்கவில்லை.
இறுதிக்கட்டப் போரின்போது, என்னென்ன போர்க்குற்றங்கள் நடந்தன என்பதை அறிவதற்காக சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கவில்லை.
இறுதிக்கட்டப் போர் பிரதேசத்துக்குள் இருந்து வெளியில் வந்த மக்களுக்கு, அங்கு என்னவெல்லாம் நடந்தன என்பது தெரியும்.

அதுபற்றி முழுமையாக விசாரணை நடத்தி உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளாமல், அரசாங்கம் அப்படி ஒன்றும் நடக்கவில்லை, எமது இராணுவத்தினர் நல்லவர்கள் என்று சொல்லிவந்தாலும் உண்மை என்பது ஒருபோதும் இல்லை என்று ஆகமுடியாது தானே.
வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்கான உரிமை உள்ளது.
உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.  எவராவது குற்றம் புரிந்திருந்தால் அவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற அர்த்தமுள்ள சிங்களப் பழமொழி ஒன்று உள்ளது.
வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற எமது கோரிக்கையும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
வடக்கில் உள்ள சிறிலங்கா இராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கை தொடர்பாக சிறிலங்கா அதிபரும், அவரது செயலரும் ஆளாளுக்கு முரண்பட்டத் தகவல்களைக் கூறுகின்றனர்.

இங்கு இராணுவத்தினர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று நாங்கள் கூறுகின்றோம்.
ஆனால், சிறிலங்கா அதிபரோ இங்கு யாழ்ப்பாணத்துக்கு வந்து 12 ஆயிரம் பேர் தான் இருக்கிறார்கள் என்கிறார்.
அதற்கு மறுநாளே, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க 70 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்றார்.
மக்களின் காணிகளை எல்லாம் சிறிலங்கா இராணுவம் எடுத்துக் கொண்டு காய்கறி பயிர் செய்கிறது.
மீன்பிடியிலும் இராணுவத்தினர் தலையிடுகின்றனர். எங்கள் மக்களுக்கு அவர்கள் இடமளிப்பதில்லை.
ஏ 9 வீதியில் போய் பார்க்கும்போது, கடைகளை வைத்திருப்பவர்கள் யார் என்றால் சிறிலங்கா இராணுவத்தினர் அல்லது அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்களின் நண்பர்கள்.
வடக்கு மாகாணம் முழுமையாக சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரத்துக்குக் கீழ் இருக்கும்போது, நாங்கள் எப்படி எங்களின் வேலைகளை முன்னெடுத்துச் செல்வது?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது செயற்படுகின்ற விதம் குறித்து பெரும்பான்மை சிங்கள மக்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.

நாட்டை பிரிப்பதற்காக அல்ல, அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறே நாங்கள் கேட்டு வருகின்றோம்.
சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், அந்தப் பிரச்சினைகளை அனைத்துலக சமூகத்திடம் கொண்டு சென்று தீர்வு காண்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :