சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – ஆதரவு திரட்டும் பணியில் அமெரிக்க, பிரித்தானியத் தூதுவர்கள்

26.2.14

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு, பேரவையின் உறுப்பு நாடுகளிடமும், ஏனைய நாடுகளிடமும், ஆதரவு திரட்டும் முயற்சியில், அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஈடுபட்டுள்ளன.

கொழும்பிலுள்ள, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் மற்றும், பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின் ஆகியோர், ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாதம் இரண்டாம் வாரம் புதுடெல்லி சென்றிருந்த பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின், அங்குள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்து, அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து கொண்டு வரவுள்ள இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தருமாறு, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின், நியுயோர்க்கிலுள்ள ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதிகள் பலரையும் சந்தித்துள்ள, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசின், ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்கான இந்த இரண்டு நாடுகளின் தூதுவர்களும், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராகச் செயற்படுமாறு ஆதரவு திரட்டி வருவது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், உறுப்பினரல்லாத, ஏனைய நாடுகளிடம், இணை அனுசரணையைப் பெறுவதற்கு ஆதரவு தேடியும், அமெரிக்காவும், பிரித்தானியாவும் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

0 கருத்துக்கள் :