காணாமல் போனவர் என்று கூறாதீர்கள்; ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தந்தை கோரிக்கை

16.2.14

என் கண் முன்னே இராணுவம் கொண்டு போன எனது மகனை நீங்கள் எவ்வாறு காணாமல் போனவர் என்று கூறுவீர்கள் என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தந்தையார் ஒருவர் சாட்சியப்பதிவுக்காக அழைக்கப்பட்ட வேளை கேள்வி எழுப்பியிருந்தார். யாழ்ப்பாணம் பிரதேச செயக பிரிவின் காணாமல் போனவர் தொடர்பிலான சாட்சியப்பதிவுகள் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. அதன்போதே தந்தையார் ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், எனது மகனை என் கண்முன்னே தான் பச்சை பிக்கப்பில் நல்லூர் அரசடி இராணுவ முகாமில் வைத்து ஏற்றிச் சென்றனர். இவ்வாறு இருக்க எப்படி என் மகனை நீங்கள் காணாமல் போனவர் என்று கூறுவீர்கள். எனது மகன் சுதன் கட்டாரில் இருந்து விட்டு திருமணம் முடிப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு திரும்பியிருந்தார். அதன்படி அவருக்கு திருமணமும் முடிந்தது. கடந்த 2006.10.25அன்று மகன் வீட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் போது நல்லூர் அரசடி இராணுவ முகாமில் மறித்து சோதனை செய்தனர் அதன்போது இருவர் என்மகனை பிடித்துள்ளனர்.

அதனை கண்ட ஒருவர் என்னிடம் வந்து தெரிவித்தார். உடனே நான் அங்கு சென்றேன் என் கண்முன்னே அருகில் இருந்த பாவனையற்ற கடைக்கட்டடத்திற்குள் இழுத்துச் சென்றனர். நான் உடனடியாக வீட்டிற்கு தகவல் தெரிவித்துவிட்டு அவர்களை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஈபிடிபியினருக்கு அறிவிக்குமாறு அனுப்பினேன். எனினும் அவர்கள் போய் முறையிட்டும் குறித்தவர்கள் தமது உயிருக்கு அச்சுறுத்தல் என்று கூறி சம்பவ இடத்திற்கு வரவில்லை. இருப்பினும் தகவலை வழங்குமாறு தெரிவித்தனர். நாங்கள் மதியம் 1.30 மணிவரை குறித்த இராணுவ முகாமிற்கு அருகிலேயே நின்றோம்.

 ஆனால் என்னை அவர்கள் நிற்க வேண்டாம் என்று அடித்தார்கள். அதன் பின்னர் சிறிது நேரத்தில் பச்சை நிற பிக்கப்பில் எனது மகனை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணத்தை நோக்கி வந்தனர். எல்லா இராணுவ முகாமுக்கும் போய் தேடினோம். அவர்கள் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனாலும் பின்னர் மாலை 4 மணியளவில் கல்வியங்காட்டில் மகனை இராணுவ வாகனத்தில் கூட்டி வந்து வீடுகளை சோதனையிட்டுள்ளனர். தொடர்ந்து 31ஆம் திகதி மாநகர சபைக்கு முன்னால் இராணுவ சீருடையுடன் எனது மகனைக் கொண்டு வந்து வீதியில் இறக்கி விடப்பட்டு போய் வருபவர்களை சோதனையிடவும் வைத்தனர். பின்னர் எந்தவித தகவலும் இல்லை பத்திரிகை ஒன்றில் வெளிவந்த புகைப்படத்தின் ஊடாக எனது மகன் சிறைச்சாலையில் இருப்பதை அறிந்தேன்.

அங்கு சென்று பார்க்கும் போது எனது மகனது பெயரில் 3பேர் உள்ளனர் என்றும் அதில் உங்கள் மகன் இல்லை என்றும் என்றும் கூறி அனுப்பிவிட்டனர்.எல்லா இடமும் தேடிவிட்டேன் இதுவரை தகவல் இல்லை. எங்கும் என் மகன் இல்லை என்றால் சிறைச்சாலையில் இருந்த என் மகனுக்கு என்ன நடந்தது என்றும் கேள்வியுடன் சாட்சியப்பதிவுகளை முன்வைத்தார் .


0 கருத்துக்கள் :