ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை குறைக்க கூடாது:மத்திய அரசு

4.2.14

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கருணை மனு மீதான முடிவை உடனே எடுக்காமல் 11 ஆண்டு காலம் நிலுவையில் வைத்திருந்ததால் முருகன், சாந்தன், பேரறிவாளனின் மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

இதேவேளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த மறு சீராய்வு மனு மீதான விசாரணையை நடத்தி வருகிறது. கடந்த 29-ஆம் திகதி முதல் கட்ட விசாரணை நடந்தது.

முதலில் முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். பிறகு 4-ஆம் திகதி மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி இன்று மத்திய அரசு வக்கீல் வாகனவாதி ஆஜராகி வாதாடினார். அபோது அவர் கூறியதாவது:-

ராஜீவ் கொலையாளிகள் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவு எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அந்த தாமதத்துக்கு காரணம் உள்ளது. அதை விளக்க முடியாது.

ராஜீவ் கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கூடாது. கொலை குற்றவாளிகளின் கருணை மனு நிலுவையில் உள்ள காலத்தில் செய்யப்படும் சித்ரவதை, அனுதாபத்தை வைத்து எந்த முடிவுக்கும் வரக்கூடாது.

வீரப்பன் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைக்கும், ராஜீவ் கொலையாளிகள் கேட்கும் சலுகைக்கும் வித்தியாசம் உள்ளது. தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற கோரும் ராஜீவ் கொலையாளிகளின் மறு சீராய்வு மனு தகுதியானது அல்ல.

எனவே அந்த மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டுவதை மத்திய அரசு விரும்பவில்லை என்று வாதிட்டார்

இதையடுத்து முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேர் சார்பில் வக்கீல் நிகில் சவுத்திரி ஆஜராகி வாதாடினார். அவர் 3 பேரின் கருணை மனு 11 ஆண்டுகள் தாமதம் செய்யப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் 3 பேரும் நன்னடத்தையுடன் நடந்து கொண்டனர். எனவே 3 பேர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றார்.

0 கருத்துக்கள் :