பயங்கரவாத இலக்குகள் மீது மட்டுமே தாக்குதல்கள் நடத்தப்பட்டன!- விமானப்படைத் தளபதி

11.2.14

யுத்தத்தின் போது இலங்கை விமானப்படையினர் பயங்கரவாதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியமைக்கான சாட்சியங்கள் இருப்பதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேவிக்ரம தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவருக்கும் விமானப் படையினரின் தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்த முடியாது. தேவையானால் வேண்டிய சந்தர்ப்பத்தில் சரியான தகவல்களை முன்வைக்க தயாராக இருக்கின்றோம்.
இலங்கை விமானப்படையின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உட்பட வானில் மேற்கொண்ட பணிகள் தொடர்பான எழுதப்பட்ட புத்தகம் ஒன்று அடுத்த சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது.

பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து ஒழிக்க விமானப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான சகல தகவல்களும் அந்த புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் போது பயங்கரவாத இலக்குகள் மீது நடத்தப்பட்ட தவறின்றிய தாக்குதல்களை வெளிப்படுத்தும் தகவல்களும் இந்த புத்தகத்தில் உள்ளன.
முக்கியமாக 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் போது கண்காணிப்பு விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் மற்றும் செய்மதிகள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் உறுதி செய்த பின்னரே தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தகவல்கள் அனைத்தும் அடங்கிய ஏரியல் ட்ப்யூட் என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம் வெளியிடப்பட உள்ளது என்றார்.

எவ்வாறாயினும் விமானப்படைத் தளபதி இவ்வாறு கூறியிருந்த போதும், இலங்கை விமானப்படையினர் பொது இடங்கள், வைத்தியசாலைகள், மக்கள் குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

விமானங்களில் இருந்து இரசாயன குண்டுகள் வீசப்பட்டதாகவும் விமான குண்டு வீச்சில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்த அமைப்புகள் கூறியுள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :