ஜெனிவா அமர்வில் நேரடியாக களமிறங்கும் பிரித்தானிய, கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள்

10.2.14

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் 25வது அமர்வின், துவக்க நாளன்று பிரித்தானிய, மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள், பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
அடுத்தமாதம், 3ம் நாள், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் ஆரம்ப அறிக்கையை அடுத்து, முதல்நாளன்று, உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரைகள் இடம்பெறும்.
இதில் பங்கேற்று உரையாற்றும் உயர்மட்டப் பிரதிநிதிகளின் அட்டவணை கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காலை அமர்வில், காபோன், கம்போடியா, ரஸ்யா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் உரையை அடுத்து, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹகியூ உரையாற்றுவார்.
பிற்பகல் அமர்வில், கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் உரையாற்றவுள்ளார்.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் தமது உரையில், சிறிலங்காவைக் கடுமையாக விமர்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹகியூ, அந்த அமர்வில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்து கருத்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியா இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கவுள்ளது.

அதேவேளை, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கனேய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் வலியுறுத்தி வரும் நிலையில், ஜெனிவாவிலும் அதை அவர் மீண்டும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும, உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரை அட்டவணையில், ஐரோப்பிய ஆணைக்குழுவின் உதவித் தலைவரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதியுமான கத்தரின் அஸ்ரன், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் லோறன்ட் பபியஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளை, உயர்நிலைப் பிரதிநிதிகளின் உரை அமர்வில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றுவாரா என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

0 கருத்துக்கள் :